* அரச தகவல் திணைக்களப் பணிப்பாளர்
எம்.ஏ.எம்.நிலாம்
ஊடகவியலாளர்களின் உரிமைகளையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு தகவல் திணைக்களத்தினூடாக முழு அளவிலான நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்திருக்கும் அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் அநுஷ பெல்பிட்ட ஊடகவியலாளர்கள் அரசியல் கட்சிகளின் நிறக்கண்ணாடிகளைப் போட்டுக் கொள்ளாமல் பாரபட்சமற்ற விதத்தில் நேர்மையுடன் தமது பணியைத் தொடர வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
ஷ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த ஒன்று கூடல் மற்றும் மீடியா டயறி வெளியீட்டு வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முஸ்லிம் மீடியா போரம் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் கொழும்பு சோனக விளையாட்டுக் கழக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றிய தகவல் பணிப்பாளர் அநுஷ பெல்பிட்ட கூறியதாவது;
ஊடகவியலாளர்கள் புத்திக் கூர்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் எப்போதும் நடுநிலையாளர்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்காக இடையிடையே பயிற்சிப் பட்டறைகளும், கருத்தரங்குகளும் நடத்தப்பட வேண்டியது மிக அவசியமானதாகும். தகவல், ஊடகத்துறை அமைச்சர் இந்த விடயத்தில் விஷேட கவனம் செலுத்தி வருகின்றார்.
அரச தகவல் திணைக்களம் நாட்டின் பல பிரதேசங்களிலும் பிரதேச ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்குகளை நடத்தி வருகின்றது. இவை இதுவரையில் சிங்கள மொழி மூலம் மட்டுமே நடத்தப்பட்டு வந்தன. இக் குறைபாட்டைச் சுட்டிக் காட்டி தமிழ் மொழி மூலமும் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை இந்த முஸ்லிம் மீடியா போரம் சுட்டிக் காட்டியது. இத் தவறை நாம் உணர்கின்றோம். அத்தவறுக்காக வருந்துகின்றோம். இனிமேல் அப்படி நடக்க இடமளிக்க மாட்டேன். அடுத்த கருத்தரங்கு முதல் சமகாலத்தில் இரண்டு மொழிகளிலும் பயிற்சிப் பட்டறையும், கருத்தரங்கும் நடத்தப்படும்.
முஸ்லிம் ஊடகவியலாளர்களில் பெரும்பான்மையினர் மும்மொழித் தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளனர். எல்லோரும் போல் தமிழ் மொழியுடன் சிங்கள மொழித் தேர்ச்சி பெற்றவர்களாக காணப்படுகின்றனர். இது மகிழ்ச்சி தரக் கூடியதாக உள்ளது. சகல இனங்களுக்குமிடையில் சமாதானம், சகவாழ்வு, புரிந்துணர்வு போன்றவற்றை கட்டியெழுப்புவதற்கான அரும்பணியை நீங்கள் முன்னெடுக்க வேண்டும். அது உங்கள் மீதான கடப்பாடு என்பதையும் மறந்து விடாதீர்கள்.
உங்களுடைய இந்த அமைப்பினூடாக கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பாடசாலை மாணவர்களுக்கும், உயர் கல்வி நிலையங்களிலும் ஊடகத்துறை தொடர்பாகவும், சமாதான சகவாழ்வு தொடர்பாகவும் தொடர் கருத்தரங்குகளை நடத்தி வருவதையிட்டு நாம் பெருமையடைகின்றோம். நாம் மேற்கொள்ள வேண்டிய பெரும் பணியை நீங்கள் செய்கின்றீர்கள். அதற்காக எமது நன்றிகளை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம். அத்துடன் வறிய ஊடகவியலாளர்களின் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்துக்கான புலமைப் பரிசில் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதும் பாராட்டுக்குரியதாகும்.
மூன்றாவது தடவையாகவும் முஸ்லிம் ஊடகவியலாளர்களின் சுய விபரக் கோவையை வெளியிட்டிருக்கிறீர்கள். இது அனைவருக்கும் மிகப் பயன்பாடுடையதாகவே கருதுகின்றோம்.
இன்றைய உலகை ஊடகமே ஆண்டு கொண்டிருக்கின்றதென்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதனடிப்படையில் தகவல் திணைக்கள ஊடகவியலாளர்களின் பணிகளை அடையாளம் கண்டு அவற்றைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முஸ்லிம் மீடியா போரம் உட்பட ஏனைய ஊடக அமைப்புகளுடன் திணைக்களம் உறவுகளை பேணி வருகின்றதென்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவ்வைபவத்தில் `கிழக்கு மாகாண சபைத் தேர்தலும் முஸ்லிம்களும்' எனும் பொருளில் அரசியல் ஆய்வாளர் எம்.ஐ.எம்.முகைதீன் சிறப்புரையாற்றினார். அத்துடன் தலைவர் என்.எம்.அமீன், ஜனாதிபதியின் ஊடக ஆலோசகர் ஏ.எச்.எம்.அஸ்வர், பொதுச் செயலாளர் தாஹா முஸ்ஸம்மில் உட்பட பலரும் பேசினர்.