* வட,கிழக்கு மாகாண ஆளுநர் இணக்கம்
மேல் மாகாணத்தில் தற்காலிக இணைப்புப்பெற்றுள்ள ஆசிரியர் தொடர்பில் வடக்கு கல்வியமைச்சு வெளியிட்ட சுற்றுநிருபத்தை வாபஸ் பெற வடகிழக்கு மாகாண ஆளுநர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்திற்கும், ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று கடந்த வாரம் திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற சமயமே இவ்விணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல்மாகாணத்தில் தற்காலிக இணைப்பு பெற்றுள்ள ஆசிரியர்கள் தொடர்பில் வடக்கு கல்வியமைச்சு வெளியிட்ட சுற்று நிருபமானது பல பாதகமான அம்சங்களைக் கொண்டுள்ளதெனவும், இது ஆசிரியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தமிழர் ஆசிரியர் சங்கம் ஆளுநரிடம் சுட்டிக்காட்டியுள்ளது.
வடக்கு கல்வியமைச்சின் சுற்று நிரூபமானது, மேல்மாகாணத்தில் இணைப்புப் பெற்றுள்ள ஆசிரியர்கள் தொழில் இழக்கும் அபாயமுள்ளதெனவும், எனவே குறித்த சுற்று நிருபத்தை வாபஸ் வாங்கவேண்டுமெனவும் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மேலும் வடக்கு, கிழக்கில் கல்வி நிர்வாக சேவையில் பாரிய வெற்றிடம் நிலவுவதாகவும், இந்நிலை நீடித்தால் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படையலாமெனவும் ஆளுநருக்குச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழர் ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கைகள் மற்றும் வலியுறுத்தல்களுக்கு பதிலளித்துள்ள வடகிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம இணைப்புபெற்ற ஆசிரியர் தொடர்பில் வடக்கு கல்வியமைச்சு வெளியிட்ட சுற்று நிருபத்தை வாபஸ்பெற இணக்கம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கல்வி நிர்வாக சேவையிலுள்ள வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுப்பதுடன் தகுதியுள்ள ஆசிரியர்களை விடுவிக்கவும் உறுதியளித்துள்ளார்.
அதேவேளை, எதிர்வரும் வாரங்களிலும் இவ்வாறான சந்திப்புகளை மேற்கொள்ளவும் ஆளுநர் சம்மதம் தெரிவித்ததாக தமிழர் ஆசிரியர்சங்க நிர்வாகச் செயலாளர் சீ.சரவணபவானந்தன் தெரிவித்தார்.