* டில்லியின் ஆசீர்வாதமின்றி எதுவும் முடியாது; தொண்டமான் கூறுகிறார்
இலங்கையின் இன நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இந்தியா வினைத்திறனுடன் கூடிய பங்களிப்பை வழங்கி உதவ வேண்டும் என்று இளைஞர் வலுவூட்டல் அமைச்சரும் இ.தொ.கா. பொதுச் செயலாளருமான ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஷ்ரீஷ்ரீ ரவிசங்கர் சுவாமியின் வாழும் கலை மன்றத்தின் ஏற்பாட்டில் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்ற இருநாள் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானிடம் புதுடில்லியிலிருந்து தொலைபேசி மூலம் ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவை தொடர்பு கொண்டபோது கருத்து தெரிவித்திருக்கும் அவர், யுத்தத்தால் எதனையும் வென்றெடுக்க முடியாது. அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அத்துடன், இந்த விடயத்தை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடமும் கொழும்பிலுள்ள இந்திய இராஜதந்திரிகளிடமும் தான் தெரிவித்திருப்பதாகவும் தொண்டமான் கூறியுள்ளார்.
இந்தியா பிராந்தியத்தில் வல்லரசு. அதன் ஆசீர்வாதமின்றி இலங்கையில் எதனையும் செய்ய முடியாது. இந்தியா இலங்கை இன நெருக்கடியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். புதுடில்லி விடுதலைப் புலிகளை தடைசெய்துள்ள நிலையில், இந்தியா கூறுவதைப் புலிகள் கவனத்தில் எடுப்பார்களா என்று கேட்கப்பட்டபோது, அவர் நேரடியான பதிலை வழங்கவில்லை. யுத்தத்தால் பிரயோசனமில்லை என்பதே இன்றைய நிலைமை என்று அவர் பதிலளித்திருக்கிறார்.
இதேவேளை, ஐ.தே.க. எம்.பி. ஜயலத் ஜயவர்தனவும் இந்தியாவின் பங்களிப்பை வலியுறுத்தியிருக்கிறார். இந்தியா பெரிய சகோதரன், இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த நோர்வேயுடன் இந்தியா அதிகளவு பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் ஜயலத் ஜயவர்தன கூறியுள்ளார்.
அதேசமயம், இலங்கை அரசாங்கம் யதார்த்த நிலமையை அலட்சியப்படுத்துவதாகவும் புலிகளை வெற்றிகொள்ள இராணுவ ரீதியான வழியை முன்னெடுத்துச் செல்வதாகவும் குற்றம் சாட்டிய டாக்டர் ஜயலத் ஜயவர்தன, `இராணுவ ரீதியிலான தீர்வு பயனளிக்குமென நாம் நம்பவில்லை' என்று குறிப்பிட்டார்.
இது இவ்வாறிருக்க, விடுதலைப் புலிகள் மீதான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறு இலங்கை அரசுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அழுத்தம் கொடுக்கவேண்டுமென தான் வலியுறுத்துவதாக வைகோ கூறியுள்ளார்.
்தமிழர்கள் தொடர்பாக இந்தியாவுக்குக் கடப்பாடு உள்ளது. யுத்தத்தை நிறுத்தி பேச்சுக்கு செல்லுமாறு இலங்கையிடம் இந்தியா கோரிக்கை விடுக்க வேண்டும். ஆனால், இந்தியா உண்மையான ஆர்வம் எதனையும் காட்டவில்லை. இந்தியா தனது பொறுப்பை உதறிவிடக்கூடாது என்று வைகோ குறிப்பிட்டதுடன், கொழும்பு சரியான வழியில் நடவடிக்கைகளை முன்னெடுத்தால் புலிகளும் சாதகமான முறையில் செயற்படுவார்களென தான் கருதுவதாக வைகோ கூறியுள்ளார்.
இதேவேளை, சமாதானம் தொடர்பாக சீவலிநாயக்க தேரர் என்ற பௌத்த மத குருவும் உருக்கமான வேண்டுகோளை விடுத்திருக்கிறார்.
`இந்த யுத்தத்தை நிறுத்த வேண்டிய தேவை உள்ளது. கொலைகள் எந்தத் தீர்வையும் கொண்டுவரப்போவதில்லை. இலங்கையிலுள்ள யாவருக்குமே நான் இதனைக் கூறுகிறேன். ஜனாதிபதி, அரசியல்வாதிகள், பிக்குகள், சாதாரண மக்கள் என யாவருக்குமே இதனை நான் கூறுகிறேன் என்று தமிழ் மொழியில் சீவலிநாயக்க தேரர் ஐ.ஏ.என்.எஸ்ஸுக்கு கூறியிருக்கிறார்.