இலங்கை அரசுக்கு ஸ்லோவாக்கியா பத்தாயிரம் பல்குழல் ரொக்கட்டுகளை விற்பனை செய்வதற்கு எதிராக லண்டனில் இன்று பெரும் ஆர்ப்பாட்டமொன்று நடைபெறவுள்ளது.
லண்டனிலுள்ள ஸ்லோவாக்கியா தூதரகம் முன்பாகவே இன்று காலை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இலங்கை அரசுக்கான இந்த பத்தாயிரம் பல்குழல் ரொக்கட் விற்பனையானது, ஈழத் தமிழர்களைக் கொன்றொழிப்பதற்காக ஸ்லோவாக்கியாவும் துணைபோவதாக அமைவதாகக் கண்டனம் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இதேவேளை, ஸ்லோவாக்கியாவின் இந்த ஆயுத விற்பனைக்கு எதிரான பிரசார அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு தற்போது தேவைப்படாத ஆயுதங்களை அது கொள்வனவு செய்துள்ளதாகவும் இவை பொது மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படக் கூடிய வாய்ப்புகளிருப்பதாகவும் அந்த அமைப்பைச் சேர்ந்த சைமன் ஹில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கைப் படையினர் இதற்கு முன்னர் இவ்வாறான ரொக்கட்டுகள் மூலம் பொது மக்களை படுகொலை செய்தும் அவர்களது சொத்துகளுக்கு பேரழிவுகளை ஏற்படுத்தியதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஸ்லோவாக்கியா அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயுத ஏற்றுமதி தொடர்பான விதிகளில் பாரிய குறைகளிருப்பதாகவும் அந்தக் குறைகளைப் பயன்படுத்தி ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆயுத விற்பனைகளில் ஈடுபட்டு வருவதாகவும் சைமன் தெரிவித்தார்.
இதேநேரம், ஸ்லோவாக்கியாவின் இந்த ஆயுத விற்பனையானது அப்பாவிகளுக்கு எதிராகப் பயன்படும் அபாயமிருப்பதாக லண்டனைச் சேர்ந்த உலக பாதுகாப்பு அமைப்பும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.