புதுவருட தினத்தன்று இடம் பெற்ற வீதிவிபத்துகள், மற்றும் பல்வேறுபட்ட சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை மாலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலத்தில் கொழும்பு தேசிய வைத்தியசாலை, காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை, தம்புள்ள மற்றும் மாத்தறை வைத்தியசாலைகளில் சுமார் 400 பேர் திடீர் விபத்தினால் காயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் 228 பேர் திடீர் விபத்தினால் காயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்பிரிவின் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளதுடன் 70 பேர் விபத்தினால் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் மேற்படி 24 மணித்தியாலத்தில் 90 பேர் திடீர் விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இதில் நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் அவ்வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் செல்டன் பெரேரா தெரிவித்தார்.
இதில் தாக்குதலினால் இருவர் பலியானதுடன் மற்ற இருவரும் வீதிவிபத்தினால் உயிரிழந்துள்ளனர். இதனைவிட 47 பேர் வீதிவிபத்துக்களினாலும், 42 பேர் தாக்குதலினாலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, திங்கட்கிழமை மாலை 6 மணியுடன் முடிவடைந்த 12 மணித்தியாலத்தில் தம்புள்ள ஆதார வைத்தியசாலையில் பல்வேறு விபத்துக்களினால் 50 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 13 பேர் தாக்குதலினாலும் 18 பேர் வீதி விபத்தினாலும் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
மாத்தளை மற்றும் கலேவெல மாவட்ட வைத்தியசாலைகளில் 49 பேர் பல்வேறுபட்ட விபத்தினால் காயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 40 பேர் மாத்தளை ஆதார வைத்தியசாலையில் உள்ளனர்.