* படைத்தரப்பு தெரிவிப்பு
மன்னாரில் கடந்த சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் கடும் சமர் நடைபெற்றுள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற மோதலில் 30 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதுடன், தங்கள் தரப்பில் 8 படையினர் கொல்லப்பட்டும் 28 படையினர் படுகாயமடைந்துமுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்த மோதலில் 30 க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும் 75 இற்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
படையினரின் இந்தத் தாக்குதல்களில் புலிகளின் பல பதுங்குகுழிகள் முற்றாக அழிக்கப்பட்டு அவை தங்களால் கைப்பற்றப்பட்டதாக படையினர் கூறுகின்றனர்.
அதிகாலை ஆரம்பமான இந்தச் சமர் சனிக்கிழமை பிற்பகல் வரை தொடர்ந்து நடைபெற்றதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
இதேநேரம், இந்தச் சமர் குறித்து விடுதலைப்புலிகள் கூறுகையில்,
சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் கடும் ஆட்லறி ஷெல் தாக்குதல் மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதல் சகிதம் நான்கு முனைகளில் பெருமெடுப்பில் படையினர் பாரிய படை நகர்வொன்றை மேற்கொண்டனர்.
குண்டு வீச்சு விமானங்களும் கடும் தாக்குதலை நடத்தின.
கட்டுக்கரை, மணல் மோட்டை மற்றும் பாலைப்பெருமாள் கட்டுப்பகுதியிலிருந்து பெரிய உடைப்பு சுலுசுப்பக்கமாகவும் பரப்பாங்கண்டலிலிருந்து கள்ளிஅடைஞ்சான் பக்கமாகவும் இந்திக்கண்டல் பகுதியிலிருந்து புளியங்குளம் நோக்கியும் இத்திக்கண்டலிருந்து பறையகுளம் பகுதி நோக்கியும் இந்தப் படைநகர்வு முயற்சிகள் இடம்பெற்றன.
பிற்பகல் 1.30 மணிவரை நடைபெற்ற இந்தப் பாரிய முன்நகர்வு முயற்சி விடுதலைப்புலிகளின் கடும் பதில் தாக்குதலால் முறியடிக்கப்படவே படையினர் பலத்த இழப்புகளுடன் பழைய நிலைகளுக்குத் திரும்பினர்.
இத்தாக்குதலில் 30 இற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன், 75 இற்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்தனர். மூன்று புலிகள் உயிரிழந்ததாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.