இலங்கையின் இன நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு வட அயர்லாந்து பெற்ற அனுபவங்கள் சிறந்த முன்னுதாரணமாக திகழுமென முன்னாள் ஐரிஷ் குடியரசு இராணுவத்தின் அரசியல் பிரிவான சின்பெய்ன் அமைப்பு இலங்கையிலிருந்து சென்றிருக்கும் சர்வகட்சிப் பிரதிநிகள் குழுவுக்கு சுட்டிக் காட்டியுள்ளது.
இன நெருக்கடிக்கு தீர்வு காண அமைக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு ஒருவார கால வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டு விட்டு நேற்று திங்கட்கிழமையும்,நேற்று முன்தினம் இரு பிரிவுகளாக நாடு திரும்பியுள்ளது.
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவினர் இங்கிலாந்து மற்றும் வட அயர்லாந்து உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள ஆட்சி நிர்வாக முறை, ஆட்சித் தன்மை, நிர்வாகப் பரவலாக்கம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தும் ஆராய்ந்திருந்தனர்.
வட அயர்லாந்துப் பாராளுமன்றத்திற்கும் சென்றுள்ள சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவினரை அப்பாராளுமன்ற சபாநாயகர் வரவேற்று பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.
இக்கலந்துரையாடலில் முன்னாள் ஐ.ஆர்.ஏ.யின் அரசியல் பிரிவான சின்பெய்ன் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் இலங்கை இனநெருக்கடிக்கு வட அயர்லாந்து அனுபவங்கள் சிறந்த முன்னுதாரணமாக அமையுமென சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு சுட்டிக் காட்டியுள்ளனர்.
முரண்பட்ட சமூகங்கள் வாழும் நாட்டில் அச்சமூகங்களுக்கு சம அளவில் அதிகாரங்களை பகிர்ந்தளித்து அவற்றை உறுதி செய்வதன் மூலம் இனநெருக்கடிக்கு தீர்வு காணும் சிக்கலை இலகுவில் தீர்க்க முடியுமெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வட அயர்லாந்து பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் பலவும் இக்கலந்துரையாடலில் பங்கு கொண்டு இலங்கையின் தற்போதைய நிலைவரம் குறித்தும் ஆர்வத்துடன் கேட்டறிந்துள்ளன.
பேராசிரியர் திஸ்ஸ விதாரண சின்பெய்ன் உள்ளிட்ட அயர்லாந்துப் பிரதிநிதிகளுக்கு இலங்கை நிலைவரம் தொடர்பில் நீண்ட விளக்கம் வழங்கியுள்ளார்.
எனினும், இந்த நீண்ட விளக்கத்திற்கு சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கும் சிறுபான்மைக் கட்சிகள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளன.
இதேவேளை, சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் வெளிநாட்டு விஜயத்தில் ஹெல உறுமய, மஹஜன எக்சத் பெரமுன ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்காத நிலையில் விஜயத்தின் ஆரம்பத்தில் பங்கு கொண்டுள்ள மேலக மக்கள் முன்னணியின் பிரதிநிதி இடை நடுவிலேயே நாடு திரும்பியுள்ளார்.