Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, April 15, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Main News
நேபாள அரசியலமைப்பு நிர்ணய சபைக்கான தேர்தலில் மாவோயிஸ்ட்டுகள் முன்னணியில்
[15 - April - 2008] [Font Size - A - A - A]
* ஆட்சியமைப்பது குறித்து பேச்சுவார்த்தை

உலகின் ஒரேயொரு இந்து இராச்சியமாக இந்து மன்னர்களால் ஆளப்பட்டுவந்த நேபாளத்தின் முடியாட்சியை உத்தியோகபூர்வமாக இல்லாதொழித்து புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கு மக்கள் ஆணையைப் பெறும் நோக்கத்துடன் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில், முன்னாள் கிளர்ச்சியாளர்களான மாவோயிஸ்ட்டுக்கள் முன்னணியில் திகழ்கின்றனர்.

இதுவரை அறிவிக்கப்பட்ட (இச்செய்தி எழுதுகையில்) 160 ஆசனங்களில் 83 ஆசனங்களில் மாவோயிஸ்ட்டுக்கள் வெற்றிபெற்றுள்ளனர். ஆனால், அவர்கள் அதிகளவு ஆசனங்களை கைப்பற்றும் சாத்தியம் காணப்படுகின்றபோதும், சிக்கலான தேர்தல் முறைமையால் புதிய அரசியல் நிர்ணய சபையில் அறுதிப்பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்வது கடினமானதாக தென்படுகிறது.

இந்தத் தேர்தலில் மாவோயிஸ்டுக்கள் மூன்றாவது இடத்துக்கே தள்ளப்படுவார்களென ஆய்வாளர்கள் பலர் எதிர்வுகூறிய நிலையில் அதிசயிக்கத்தக்க வகையில் மாவோயிஸ்ட்டுக்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஆரம்ப கட்டத்தில் நேபாள காங்கிரஸ் கட்சியும் ஐக்கிய மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியும் (யூ.எம்.எல்.) முன்னணியில் திகழ்ந்தன. ஆனால், பின்னர் இக்கட்சிகள் தலா 20 ஆசனங்கள் வரையிலுமே இதுவரை பெற்றுள்ளன.

10 வருட கிளர்ச்சியின் பின் மாவோயிஸ்ட்டுக்களுக்கு சோதனைக்களமாக விளங்கிய இத்தேர்தல், அவர்களுக்கு அளப்பரிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மாவோயிஸ்ட்டுக்களின் உயர்மட்டத் தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் அவர்கள் அதிகளவு பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளனர். நாட்டுப் புறத்தில் மட்டுமல்லாது, தலைநகர் காத்மண்டுவின் சுற்றுப்புறங்களிலுள்ள 15 தேர்தல் தொகுதிகளில் 7 தொகுதிகள் மாவோயிஸ்ட்டுக்கள் வசமாகியுள்ளன.

ஜனநாயகக் கட்சிகள் என்று மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த கட்சிகள் இப்போது மக்கள் முன் செல்வாக்கு இழந்திருப்பதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. இக்கட்சிகளைச்சேர்ந்த பல சிரேஷ்ட அரசியல்வாதிகள் தோல்வியை தழுவியுள்ளனர். பிரதமர் கிரிஜாத் பிரசாத் கொய்ராலாவின் மருமகள் மற்றும் யூ.எம்.எல். கட்சியின் தலைவரின் மகளும் தோல்வி கண்ட முக்கிய பிரமுகர்களாகும். இவர்களை விட அரச குடும்ப உறுப்பினரும் முன்னாள் பிரதமருமான சூரியா பகதூர் தாபீபாவும் தனது தொகுதியில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டார்.

வெற்றிப்படியிலுள்ள மாவோயிஸ்ட் தலைவர்கள் ஏனைய கட்சிகளுடன் ஒத்துழைத்து செயற்படப்போவதாக உறுதியளித்திருக்கின்றதுடன், நேபாளத்தின் வல்லமை வாய்ந்த அண்டைய நாடுகளான சீனா, இந்தியாவுடனும் நல்லுறவுகளை பேண விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, முடியாட்சியை இல்லாதொழிப்பதென கடந்த டிசம்பரில் மாவோயிஸ்ட்டுக்களுக்கும் ஆளும் அரச கூட்டணிக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை புதிய சட்டவாக்க சபையானது உறுதிப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது.

தேர்தல் வெற்றியை காத்மண்டுவில் மாவோயிஸ்ட்டுக்களின் தலைவர் பிரசண்டா கொண்டாடியுள்ளார்.

`சமாதான நடவடிக்கைகளிலும் பல கட்சி ஜனநாயகத்திலும் நாட்டைக் கட்டி எழுப்புவதிலும் நாங்கள் முழு அளவிலான அர்ப்பணிப்புணர்வுடன் உள்ளோம்' என்று அவர் கூறியிருக்கிறார்.

தமது கரங்களில் சுத்தியல், அரிவாளுடன் கூடிய செவ்வர்ணக் கொடிகளுடனும் நெற்றியில் குங்குமத்துடனும் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் நாடளாவிய ரீதியில் வெற்றி ஊர்வலங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

601 ஆசனங்களை கொண்ட சட்டவாக்க சபைக்கான தேர்தலானது மாவோக்களின் நீண்டகால போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்த சமாதான உடன்படிக்கைக்கு முக்கியமானதொரு விடயமாகும்.

பழைய தொகுதிவாரி முறையில் முதற்கட்டமாக 240 தொகுதிகளில் தேர்தல் இடம்பெற்றுள்ளது. மற்றைய 335 ஆசனங்களுக்கு விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் தேர்தல் இடம்பெறவுள்ளது. இதற்கான முடிவுகளை தீர்மானிக்க பல வாரங்கள் செல்லுமென தெரிவிக்கப்படுகிறது. எஞ்சிய 26 ஆசனங்களையும் இடைக்கால அரசாங்கமே தீர்மானிக்கும்.

2005 இல் முழு அளவில் அதிகாரத்தை மன்னர் கயனேந்திரா இழந்துவிட்டார்.

தமது தேர்தல் பிரசாரத்தின்போது இடதுசாரிக் கொள்கைகள் பலவற்றை மாவோயிஸ்ட்டுக்கள் கைவிட்டுள்ளனர். உலகின் வறிய நாடுகளில் ஒன்றான நேபாளத்தின் மக்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் மாவோயிஸ்ட்டுக்கள் கவனத்தை செலுத்துவார்களென எதிர்பார்க்கப்படுகிறது.

மாவோயிஸ்ட்டுக்களின் வெற்றியானது அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் சவாலாக இருக்குமென கருதப்படுகிறது. மாவோயிஸ்ட்டுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை அமெரிக்கா எதிர்த்து வந்ததுடன் தற்போதும் அவர்களை பயங்கரவாதிகளென்ற அடையாளத்தையே குத்தி வைத்திருக்கிறது. இந்தியாவும் தனது நாட்டில் மாவோயிஸ்ட்டுக்களின் கிளர்ச்சியை எதிர்கொண்டு வருகின்றது.

இது இவ்வாறிருக்க பிந்திக் கிடைத்த தகவல்களின் பிரகாரம் மாவோயிஸ்ட்டுக்களின் தலைவர் பிரசண்டா அடுத்த அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக பிரதமர் கிரிஜாத் பிரசாத் கொய்ராலாவுடன் பேச்சு நடத்தியிருக்கிறார்.

அதேசமயம், அரசியலமைப்பு நிர்ணய சபை தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியது குறித்து மன்னர் கயனேந்திரா திருப்தி தெரிவித்திருக்கிறார்.

புத்தாண்டில் நேபாள மக்களுக்கு சமாதானம், சுபிட்சம், சுகவாழ்வு கிட்டப் பிரார்த்திருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com