இந்திய - தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 ஆவது டெஸ்ட்டின் 3 ஆம் நாள் ஆட்டத்தின் முக்கிய அம்சங்கள்.
* இஷாந்த் - ஷ்ரீசாந்த் ஜோடி 46 ஓட்டங்கள் எடுத்தது. இதன்மூலம் கான்பூரில் கடைசி விக்கெட்டுக்கு அதிக ஓட்டம் எடுத்த ஜோடி என்ற பெருமை பெற்றது. முன்னதாக 1979 இல் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் இந்தியாவின் திலிப் ஜோஷி, கார்சன் காவ்ரி ஜோடி 45 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
* இரண்டாவது இனிங்ஸில் தென்னாபிரிக்காவின் மெக்கன்சியை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை ஷ்ரீசாந்த் எட்டினார்.
இத்தொடரில் 19 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்பஜன் தொடர் நாயகன் விருதைக் கைப்பற்றினார். இதன் மூலம் தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார். முன்னதாக கும்பிளே (1992), ஷ்ரீநாத் (1996), ஷ்ரீசாந்த்(2006) ஆகியோர் 18 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதே சாதனையாக இருந்தது.
* கான்பூரில் இரண்டு இனிங்ஸிலும் சேர்த்து 96 ஓட்டங்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஹர்பஜன், தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையைப் படைத்தார்.
* ஞாயிற்றுக்கிழமை 12 ஓட்டங்கள் மட்டும் கொடுத்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்திய சேவாக் டெஸ்ட் போட்டிகளில் தனது சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்தார்.
* 121 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த தென்னாபிரிக்க அணி இந்தியாவுடனான டெஸ்ட்டில் தனது மூன்றாவது குறைந்தபட்ச ஓட்டத்தை பதிவு செய்தது. கான்பூரில் தென்னாபிரிக்க அணி எடுத்த குறைந்த ஓட்டம் இதுதான்.
* கப்டனாகப் பங்கேற்ற முதல் டெஸ்டில் அணிக்கு வெற்றிதேடிக் கொடுத்து அசத்தினார் மகேந்திரசிங் தோனி. பரிசளிப்பு விழாவின்போது கிண்ணத்தை பெற்றுக்கொள்ள இவரை அழைத்தபோது தனதுக்குப் பதிலாக கும்பிளேயை அனுமதித்து பெருந்தன்மையாக நடந்துகொண்டார்.
* தென்னாபிரிக்க வீரர் ஹரிசை `கட்ச்' பிடித்து ஆட்டமிழக்கச்செய்ததன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக `கட்ச்' பிடித்த வீரர்கள் வரிசையில் ராவிட் (172), நியூசிலாந்தின் பிளமிங்கை (171) முந்தி இரண்டாவது இடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் அவுஸ்திரேலியாவின் மார்க்வோ (181) இருக்கிறார்.
* ஐ.சி.சி.டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடத்திலிருந்த இந்தியா அதைத் தக்கவைத்துக்கொள்ள கான்பூர் டெஸ்டில் வெற்றிபெறவேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இக்கட்டான நேரத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி வீரர்கள் போட்டியை வென்றனர். இதன்மூலம் ஐ.சி.சி.டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடத்தைத் தக்கவைத்துக்கொண்டனர். தென்னாபிரிக்கா தொடர்ந்தும் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
* முதன் முறையாக: இந்திய ஆடுகளங்கள் பெரும்பாலும் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக இருப்பதால் டெஸ்ட் போட்டிகள் 5 நாட்கள் வரை இழுக்கும். ஆனால், ஆமதாபாத் ஆடுகளத்தில் வேகங்கள் மிரட்ட, தென்னாபிரிக்கா மூன்றாவது நாளில் வென்றது. கான்பூரில் இந்தியா சுழற்ஜாலம் நிகழ்த்த இங்கும் மூன்றாவது நாளில் முடிவு தெரிந்துவிட்டது. இந்திய மண்ணில் தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் மூன்று நாளில் முடிந்தது இதுவே முதல்முறை.
* இந்திய, தென்னாபிரிக்க அணிகள் மோதிய டெஸ்ட் தொடர் சமன் ஆவது இதுவே முதல் முறை. இதற்கு முன்னதாக இவ்விரு அணிகளும் 7 முறை டெஸ்ட் தொடரில் விளையாடியுள்ளன. அதில் தென்னாபிரிக்கா 5. இந்தியா 2 என்று தொடரை வென்றுள்ளன.