இலங்கைக்கு எதிரான 2 ஆவது ஒரு நாள் போட்டியில் சந்தர்போல், சாமுவேல்ஸின் அதிரடியின் துணையுடன் மேற்கிந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
மேற்கிந்திய- இலங்கை அணிகளிடையே நடந்த பரபரப்பான முதலாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய வீரர் சந்தர்போல் கடைசிப் பந்தில் சிக்சர் அடித்து தனது அணிக்கு வெற்றிக்கனியைப் பறித்துக்கொடுத்தார்.
இந்த நிலையில், 2 ஆவது ஒருநாள் போட்டி போர்ட் ஒவ் ஸ்பெயினில் சனிக்கிழமை நடந்தது. முதலில் ஆடிய இலங்கை அணி 30.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 112 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது பலத்த மழை பெய்தது. இதனால் 3-1/4 மணிநேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து இலங்கையின் இனிங்ஸ் அத்துடன் முடித்துக்கொள்ளப்பட்டது. மழை விட்டதும் மேற்கிந்திய அணி 25 ஓவர்களில் 125 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்று டக் வேர்த் லூயிஸ் விதிப்படி இலக்கு திருத்தியமைக்கப்பட்டது.
இதன்படி ஆடிய மேற்கிந்திய அணி பிராவோ (2 ஓட்டம்), கப்டன் கெய்ல் (11 ஓட்டம்), சர்வான் (1 ஓட்டம்) ஆகியோரின் விக்கெட்டுகளை 6 ஓவருக்குள் பறிகொடுத்தது. பின்னர் 4 ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்த்த சந்தர்போல், சாமுவேல்ஸ் நட்சத்திர ஜோடி அதிரடியாக விளையாடி மேற்கிந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
மேற்கிந்திய அணி 20.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ஓட்டங்கள் எடுத்தது. 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. சந்தர்போல் 42 பந்துகளில் 52 ஓட்டங்களும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) சாமுவேல்ஸ் 49 பந்துகளில் 54 ஓட்டங்களும் (3 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்காதிருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகளைக் கொண்ட தொடரை மேற்கிந்தியா 2-0 என்று கைப்பற்றியது. 3 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சென் லூசியாவில் நேற்று நடைபெற்றது.