வ.திருநாவுக்கரசு
இலங்கையில் தினம் தினம் உயிர்கள் அழிக்கப்படுவது சர்வசாதாரணமான விடயமாகி விட்டது. அண்மைக் காலமாக பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோரும் கிரமமாக கொலை செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் ஒன்றாகவே சிரேஷ்ட அமைச்சரும் பிரதம அரசாங்க கொரடாவுமாக விளங்கியவராகிய ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே (மற்றும் 14 பேர்) கடந்த 6 ஆம் திகதி வெலிவேரியாவில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் அமைந்துள்ளது.
அடிப்படைப் பிரச்சினையாகிய தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு நம்பகத் தன்மையான காத்திரமான அதிகாரப்பகிர்வு மூலம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டிய முயற்சியில் கவனம் செலுத்தாமல் யுத்த முனைப்பிலேயே அரசாங்கம் குறியாகயிருக்கும் வரை இத்தகைய துர்ப்பாக்கியமான கொலைகள் நடந்த வண்ணமே இருக்கப் போகின்றன என்பதையே கடந்த கால அனுபவங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.
அமைச்சர் பெர்னாண்டோ புள்ளேயின் கொலைச் சம்பவத்தை அடுத்து பயங்கரவாதம் பூண்டோடு அழிக்கப்பட வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் எந்தவகையிலும் குறைக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அடித்துக் கூறியுள்ளார்.
சர்வதேச சமூகத்தின் உணர்வலைகள்
பெர்னாண்டோ புள்ளே படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சர்வதேச மட்டங்களிலிருந்து வெளியாகியுள்ள உணர்வலைகளைப் பார்க்குமிடத்து நீண்டகால இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டு முடிவு கட்டுவதற்கு அரசியல் தீர்வே அவசியம் என்பதையே ஐரோப்பிய ஒன்றியம் , அமெரிக்கா, அவுஸ்திரேலியா அடங்கலாக சர்வதேச சமூகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளதுடன் அதனை துரிதப்படுத்த வேண்டுமென்ற செய்தியையே தமது அறிக்கைகளில் விடுத்துள்ளன. குறிப்பாகச் சொன்னால் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுகள் ஆணையாளர் பெனிற்றோ வல்ட்னர் அம்மையார் வெலிவேரியா தற்கொலைக் குண்டுத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளதுடன் பொதுமக்களுக்கெதிரான எல்லாவிதமான பயங்கரவாதச் செயல்களும் நிறுத்தப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு அன்றி அரசியல்தீர்வு மூலம் நிரந்தர சமாதானம் எட்டப்பட வேண்டும் என்பதே அவசியமாகும் எனவும் வல்ட்னர் அம்மையார் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார். கொலைச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவதும் இவ்வாறான ஆலோசனைகள் வழங்கப்படுவதும் தொடர்கதையாகியுள்ளதே தவிர கொலைகள் ஏட்டிக்குப் போட்டியாக நடத்தப்படுவது நின்ற பாடில்லை என்பதே மிகக் கவலை தரும் யதார்த்தமாயுள்ளது.
அரசாங்கம் மேலும் ஆயுதங்கள் கொள்வனவு
பாகிஸ்தானிடமிருந்து 25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களையும் ஸ்லோவாக்கியாவிடமிருந்து 10,000 இராணுவ ஏவுகணைகளையும் அடுத்த சில தினங்களில் அரசாங்கம் பெற்றுக் கொள்ளவிருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. சீனாவிடமிருந்தும் ஆயுதங்கள் தருவிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் இல்லாமல் இல்லை. விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவதற்கான கால எல்லை தற்போது 2009 இறுதிவரை நீடிக்கப்பட்டுள்ளது தெரிந்ததே. முன்னைய சந்திரிகா அரசாங்கமும் குறிப்பாக பாகிஸ்தானிடமிருந்து பல்குழல் ரொக்கற் லோஞ்சர்களைப் பெற்று விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடிப்பதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்தது. அதே பாதையிலேயே மகிந்த ராஜபக்ஷ அரசாங்கமும் தீவிரமாகப் பயணித்துக் கொண்டிருக்கின்றது.
உண்மையில், பயங்கரவாதத்தை பூண்டோடு ஒழிக்கும் பயணம் 1979 இல் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர் . ஜயவர்த்தன ஆரம்பித்து ஆறு மாத காலக்கெடு விதித்து பிரிகேடியர் வீரதுங்கவை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்தவர்.
அதனை அவ்வாறு நிறைவேற்றிவிட்டதாக 1979 டிசம்பர் மாதம் வீரதுங்க ஜனாதிபதி ஜயவர்த்தனவுக்கு அறிவித்தவர். அவ்வாறே இராணுவ ரீதியாக வெற்றியீட்டி அரசியல் தீர்வு என்பதைத் தட்டிக்கழித்து விடலாமெனும் நப்பாசைகொண்டே எல்லா அரசாங்கங்களும் செயற்பட்டு வந்துள்ளன. எனவே, யுத்தமானது மென்மேலும் உக்கிரமடைந்து இன்று நாடு மிக இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அது கூட நன்கு உணரப்படாத நிலையே இன்றும் காணப்படுகிறது.
"ஐக்கியத்தையும், சுபிட்சத்தையும் கொண்டுவரும் சிங்கள, தமிழ் புதுவருடத்தை நாம் மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்" என்கின்றார் ஜனாதிபதி ராஜபக்ஷ விடுத்த புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் நாட்டு வளங்களை யத்தத்திற்கு விரயம் செய்துகொண்டு சமூகங்கள் மத்தியில் விரிசல்களையும் விரக்தி நிலைமைகளையும் ஏற்படுத்திக் கொண்டு, எவ்வாறு ஐக்கியமும் சுபிட்சமும் வந்தடையும் என மக்கள் நம்பிக்கை கொள்ள முடியும்? மறுபுறத்தில், இராணுவத்தின் மனநிலையை அதிகரிக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அறைகூவல் விடுத்துள்ளார். அதாவது, விடுதலைப்புலிகளை அல்லது புலிப் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளை முறியடிப்பதற்கு புலிப்பயங்கரவாதிகள் முயற்சிப்பது அவர்களுக்கு நல்லொழுக்கமுள்ள ஒரு சமுதாயத்தின் பெறுமதியைப் புரிந்துகொள்ள முடியாமையாகும் என விக்கிரமநாயக்க கூறியுள்ளார். தமிழருக்கு உரித்தான அரசியல் அபிலாஷைகளை, அவற்றின் பெறுமதியை மதித்து நடப்பதற்கு ஆட்சியாளர் அன்று முதல் தவறிழைத்து தமிழரை அழித்தொழிக்கும் கைங்கரியத்தை திட்டமிட்டு நடத்தி வந்ததன் பயனாகவே தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்றம் பெற்றனர் என்ற வரலாற்றினை மறந்த நிலையே காணப்படுகிறது.
விடுதலைப்புலிகள் விடுக்கும் செய்தி
இலங்கை அரசாங்கத்திற்கு பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் உண்டானால் அதனை நோர்வே ஊடாக முடுக்கிவிடும் பட்சத்தில் தாம் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராகியிருப்பதாகவும் சமாதான வழியில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வாய்ப்பு இருந்தால், அதைப்புலிகள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வர் எனவும் விடுதலைப்புலிகள் அரசியல்துறைப்பொறுப்பாளர் நடேசன் கூறியுள்ளார். அதேநேரத்தில் கடந்து ஒருவருடத்துக்கு மேலாக அரசபடைகள் முன்னேற மேற்கொண்ட முயற்சிகளை தாம் தடுத்துநிறுத்துவதில் ஈடுபட்டு வந்ததாகவும், எனிமேல் தாம் உக்கிரமான தாக்குதல்களை நடத்தத் தயாராயிருப்பதாகவும் நடேசன் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த யுத்தமானது இரு தரப்பினராலும் வெல்ல முடியாததென அன்று முதல் ஆய்வாளர்கள் வெளிப்படுத்தி வந்த கருத்தாகும். ஆனால், மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் யுத்தம் வெல்ல முடியும், வெற்றி வெகுதூரத்தில் இல்லை எனும் சித்திரத்தினை வரைந்து தென்னிலங்கையில் மக்களுக்கு ஏமாற்றுவித்தை கற்பித்து தியாகங்கள் செய்யுங்கள், சிறிது காலம் வயிற்றுப்பட்டியை இறுக்கிக் கொள்ளுங்கள். எனக்கோரி மக்களைப் பட்டினி, போட்டு வருகின்றது. குறிப்பாக பரந்துபட்ட ஏழை எளிய மக்கள் விசம் போல் ஏறிய வண்ணமுள்ள வாழ்க்கைச் செலவு காரணமாக கதிகலங்கி நிற்கின்றனர். எனவே, யுத்தமுனையில் துரிதமாக சில வெற்றிகளை ஈட்டுவதற்கே அரசாங்கம் பகீரதப்பிரயத்தனம் செய்து வருகின்றது. அதுவும் எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தல் வருமுன் குறிப்பாக மன்னாரில் அடம்பன் மடு பிரதேசத்தில் வெற்றியீட்டுவதற்கு அரசாங்கம் கடுமையாக முயன்று வருவதையும் விடுதலைப்புலிகள் பெருமளவில் கொல்லப்பட்டு வருகின்றனர் என்றவாறான புள்ளிவிபரப் பிரசார யுத்தத்தையும் மும்முரமாக நடத்தி வருகிறது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல்
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைத் தேடுவதற்கு முற்றிலும் எதிர்மறையான விதத்தில், கிழக்கில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கே கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு ராஜபக்ஷ அரசாங்கம் புறப்பட்டது. படை பலமும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் ஆயுத பலமும் இந்த முயற்சிக்கு அரசாங்கத்தின் கைவசம் உள்ளது. அங்கே தேர்தல் நடத்துவதன் மூலம் கிழக்கில் ஜனநாயகம் மீள நிலைநாட்டப்படுவதே அரசாங்கத்தின் குறிக்கோளென சர்வதேச மட்டத்தில் பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால், இது எடுபடவில்லை என்பதைக் காணமுடிகிறது. அதாவது, குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து, விசேடமாக ஆடை உற்பத்திகள் ஏற்றுமதிக்கான GSPt எனப்படும் சலுகை அடிப்படையிலான வர்த்தக வசதிகளைத் தொடர்ந்து பெற்றுக் கொள்வதற்காக சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மேற்கொண்ட தீவிர முயற்சி பலனளிக்கவில்லை. அது ஒருபுறமிருக்க, `ஜனநாயக விளம்பரம்' செய்யப்படும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் எனப்படும் ஏமாற்று வித்தைக்கு பிரதான எதிர்க்கட்சியாகிய ஐக்கிய தேசியக்கட்சியும் துணைபோகும் படலத்தையே காண முடிகிறது.
கடந்த மார்ச் 10 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டபோது பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி ஐ.தே.க. ஒதுங்கியிருந்தது. எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பெரிய எடுப்பில் குதிப்பதற்கு ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த `அதிரடி' முடிவையடுத்து ஐ.தே.க. முஸ்லிம் காங்கிரஸுடன் கூட்டுச் சேர்ந்து கிழக்கில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டத் தலைப்பட்டுள்ளது,.
ஏறத்தாழ 20 வருடங்களாக இணைக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம் சிங்கள இனப் பித்தர்கள் கங்கணம் கட்டி நின்றதன் காரணமாக நீதித்துறையின் சட்டரீதியான உத்தரவின்பேரில் துண்டாடப்பட்டது. துணிச்சலான அரசியல் நடவடிக்கையாக பாராளுமன்ற அங்கீகாரம் பெற்று வடக்கு கிழக்கை மீள இணைத்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு அது பெரிதும் உந்துசக்தியாயிருந்திருக்கும். மாறாக, இன்று பிளந்து வெடித்துள்ள ஜே.வி.பி. அன்று நீதித்துறை சென்று நிறைவேற்றிய கைங்கரியத்தை ராஜபக்ஷ அரசாங்கம் துரித கதியில் நடைமுறைப்படுத்தியுள்ளது. கிழக்கு விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்டு கிழக்கு மக்களுக்கு வெள்ளித் தட்டத்தில் ஜனநாயகம் வழங்கும் போர்வையில் எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (ஐ.ம.சு.மு.) தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினரையும் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எதிரணியினரையும் இணைத்துக் கொண்டு கிழக்கில் தனது பிடியைப் பலப்படுத்தப்புறப்பட்டுள்ளது. இதுதான் உண்மையில் பிரித்தாளும் பிரிவினைவாத மோசடியென இனங்கண்டு அதனை எதிர்க்க வேண்டியது உண்மையான ஜனநாயக சக்திகளின் கடப்பாடாகும்.
ஐ.தே.க.வின் பிரசாரம் வேறு நடவடிக்கை வேறு
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஜனநாயகத்தைக் காற்றில் பறக்க விட்டுள்ளது. ஊழல் மோசடிகள் தலைவிரித்தாடுகின்றன. அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தத்தை அரசாங்கம் புறந்தள்ளி விட்டு தான்தோன்றித்தனமாக உயர் பதவிகளுக்கான நியமனங்களை வழங்கி மத்திய வங்கியைக் கூட அரசியல் மயப்படுத்தி உதாரணமாக பணவீக்கத்தை 28%க்கு உயரப் பறக்க விடுமளவுக்கு நிதி நிர்வாகத்தை சீரழித்து விட்டது என்றெல்லாம் ஐ.தே.க. சற்று கடுமையாகப் பிரசாரம் செய்து வந்துள்ளது. அதேநேரத்தில் ஜனநாயக தேர்தல் எனும் மோசடிக்கு ஐ.தே.க. துணை போய்க் கொண்டிருக்கின்றது என்பதை ஏலவே கூறியுள்ளேன். அதாவது யானைச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு "உணர்வுபூர்வமாக முடிவெடுத்துள்ள ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினரைப் பகடைக் காய்களாகப் பாவித்து கிழக்கில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கே ஐ.தே.க. உள்நோக்கம் கொண்டு காய்கள் நகர்த்தி வந்துள்ளது. இதனை ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் ஒரு சில இளைய ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அளித்த விருந்துபசாரம் ஒன்றின்போது வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். எனவே, ஒட்டுமொத்தமாகப் பார்க்குமிடத்து, ஐ.ம.சு.மு.வும் ஐ.தே.க.வும் கிழக்கில் தத்தம் ஆதிக்கத்தை நிலைநாட்டவே முற்பட்டுள்ளன என்பதை சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இறுதியாக மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஆவேசப்பட்டு பயங்கரவாதத்தை குறுகிய காலத்தில் பூண்டோடு அழித்து விடுவோமென முழக்கம் செய்து யுத்தத்தைத் தீவிரப்படுத்துவதால் பயனெதுவும் வரப்போவதில்லை. மாறாக, குறிப்பாக தமிழ் மக்களுக்கு மென்மேலும் அழிப்புகளும் அவலங்களும் விளைவிப்பது மட்டுமல்லாமல் நாட்டையும் மென்மேலும் படுகுழியில் தள்ளிவிடும் காரியமே நடந்தேறும்.
எனவே, அரசாங்கம் அவ் அழிவுப் பாதையைக் கைவிட்டு உருப்படியான அரசியல் தீர்வை நோக்கி மனோ திடத்துடன் பயணிக்க வேண்டும். அதுதான் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான ஒரே ஆயுதமாகும்.