தென்னிலங்கையின் மூன்றாவது பெரிய அரசியல் கட்சியென்று வர்ணிக்கப்படும் ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.)க்குள் உருவெடுத்திருக்கும் தகராறு தற்போது அரசியல் அரங்கின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்திருக்கும் ஒரு முக்கிய விவகாரமாக இருக்கிறது. ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளரும் பாராளுமன்றக் குழுவின் தலைவருமான விமல் வீரவன்சவுக்கும் அக்கட்சியின் தலைமைத்துவத்துக்கும் இடையிலான இத் தகராறு அதன் கொள்கை நிலைப்பாடுகளில் குறிப்பாக இன நெருக்கடியுடன் தொர்புபட்ட விவகாரங்கள் குறித்த அணுகுமுறைகளில் மாற்றத்தைக் கொண்டுவரக் கூடுமோ என்று சில அரசியல் அவதானிகளைச் சிந்திக்க வைத்திருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.
1999 டிசம்பர் ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி.யின் வேட்பாளராகப் போட்டியிட்ட (தற்போதைய களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்) நந்தன குணதிலக ஒருவருடத்துக்கும் கூடுதலான காலத்திற்கு முன்னர் கட்சியின் தலைமைத்துவத்துடன் முரண்பட்டுக்கொண்டு கட்சிச் செயற்பாடுகளில் இருந்து தூர விலகியிருந்தபோது அந்த விவகாரம் பெரிதுபடுத்தப்படவில்லை. ஆரம்பத்தில் ஊடகங்களினால் ஏற்படுத்தப்பட்ட சில சலசலப்புக்களுக்குப் பிறகு நந்தன குணதிலக விவகாரம் அடங்கிப்போனது. தனது அரசாங்கத்தில் இணையுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஜே.வி.பி.யின் தலைமைத்துவம் நிராகரித்ததை குணதிலக கடுமையாக ஆட்சேபித்தார் என்று அப்போது செய்திகள் வெளியாகியிருந்தன. அதையடுத்து அரசாங்கத்திற்குச் சார்பான நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டு குணதிலக தீவிர அரசியல் செயற்பாடு எதுவுமின்றி அமைதியாக இருந்துவருகின்றார். தனக்கு ஆதரவாகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களையோ அல்லது சிரேஷ்ட உறுப்பினர்களையோ அணிதிரட்டும் கைங்கரியம் எதிலுமே குணதிலக ஈடுபடவில்லை.
ஆனால், விமல் வீரவன்ச தன்னைக் கட்சியிலிருந்து இடைநிறுத்துவதற்கு மத்திய குழு அண்மையில் மேற்கொண்ட தீர்மானத்தையடுத்து, தனது பிரச்சினையை பகிரங்கத்திற்குக் கொண்டுவந்து தனக்கு ஆதரவாகப் பாராளுமன்ற உறுப்பினர்களை அணிதிரட்டும் வேலைகளில் இறங்கியிருந்தார். கட்சியின் தலைமைத்துவத்துடனான தனது தகராறு குறித்து பாராளுமன்றத்தில் வீரவன்ச கடந்த வாரம் அறிக்கையொன்றையும் விடுத்து உரையாற்றினார். அன்றைய தினம் அவருக்கு ஆதரவாகப் 10 ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு ஹோட்டலொன்றில் பத்திரிகையாளர் மாநாட்டையும் கூட்டியிருந்தனர். இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் மீது வன்முறையும் கட்டவிழ்த்துவிடப்பட்டது. இதன் காரணமாக ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார். வீரவன்சவுக்கு ஆதரவு தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் மீண்டும் ஜே.வி.பி.யின் தலைமைத்துவத்துக்கே தாங்கள் விசுவாசமாக இருப்பதாகப் பகிரங்க அறிவிப்புக்களை விடுத்ததையும் காணக்கூடியதாக இருந்தது. ஜே.வி.பி.யிற்குள் ஏற்பட்டிருக்கும் பிளவு நிரந்தரமானதாகிவிட்டதாகவே நம்பப்படுகிறது. தலைமைத்துவத்துக்கும் வீரவன்சவுக்குமிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது சாத்தியமில்லை என்று கூறப்படுகின்றது.
ஜே.வி.பி.யின் இத் தகராற்றைப் பொறுத்தவரை ஒரு விரோதமான அம்சத்தை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. கட்சியைப் பிளவுபடுத்துவதில் அரசாங்கமும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் சதி முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவும் வீரவன்சவும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஜே.வி.பி.யின் தலைவர்கள் பிரசாரம் செய்திருந்தபோதிலும், அவர்களில் வீரவன்சதான் தீவிரமாகப் பிரசாரப் பணிகளை முன்னெடுத்தவர் என்பதில் சந்தேகமில்லை. இனநெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கான சமாதான முயற்சிகளை கர்ணகடூரமாக எதிர்த்து நின்ற வீரவன்ச ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு ராஜபக்ஷ அரசாங்கத்தின் போர் முன்னெடுப்புக்களுக்கு முழு மூச்சாக ஆதரவு தெரிவித்து சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரங்களைச் செய்து வந்திருக்கிறார். விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிக்காமல் அரசியல் தீர்வு குறித்துப் பேசவே கூடாது என்று வலியுறுத்திவரும் வீரவன்ச தனது கட்சியைத் தவிர வேறு பேரினவாத அமைப்புகளிலும் பிரதான அங்கம் வகித்து இராணுவத் தீர்வை நியாயப்படுத்துகின்றார்.
அதேவேளை, சோமவன்ச அமரசிங்கவும் வீரவன்சவுக்கு எந்தளவுக்கும் குறைவில்லாத வகையில் சமாதான முயற்சிகளுக்கு எதிராகவும் போருக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்துவந்திருக்கிறார். அதேபோன்றே ஜே.வி.பி.யின் தலைவர்கள் சகலருமே பேரினவாத அரசியலை முழு மூச்சுடன் முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். ஜே.வி.பி.அதன் வரலாற்றிலே எப்போதுமே சிறுபான்மையினங்களுக்கு குறிப்பாகத் தமிழர்களுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடுகளையே எடுத்து வந்திருக்கிறது. அக் கட்சி அதிகாரப் பரவலாக்கல் திட்டங்களை நெடுகவும் எதிர்த்தே வந்திருக்கிறது. இன்று ஜே.வி.பி.க்குள் தோன்றியிருக்கும் தகராறுக்கு இனநெருக்கடியுடன் தொடர்புடைய விவகாரங்களில் கட்சி கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறை குறித்த எந்தக் கருத்துமுரண்பாடுமே காரணமல்ல என்பதைப் புரிந்துகொள்வது அவசியமாகும். அக்கட்சி பிளவுபடுமானால் இருதரப்பினருமே ஏட்டிக்குப் போட்டியாக படுமோசமான பேரினவாத அரசியல் பிரசாரங்களில் ஈடுபடக்கூடிய சாத்தியங்களை நிராகரிப்பதற்கில்லை. அதனால் ஜே.வி.பி.க்குள் தற்போது தோன்றியிருக்கும் நெருக்கடி பேரினவாதப் போக்கில் இருந்து அக்கட்சி விடுபடுவதற்கான வழியைத் திறந்துவிடுமென்று எதிர்பார்ப்பது அர்த்தமற்றதாகும்.