பாகிஸ்தான் அணுவாயுதங்களுக்குப் பொறுப்புள்ள அதிகாரிகளுடன் நேரடியாகத் தொடர்புகொள்வதற்கு வசதியாக தனது அதிகாரியொருவரை பாகிஸ்தான் தூதரகத்தில் நியமிக்கப்போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
`த நியூஸ்' என்ற பத்திரிகை வெளியிட்டுள்ள இச் செய்தியில் இது தொடர்பான தனது திட்டத்தை பாகிஸ்தான் அரசுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அனுப்பியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க இராணுவத்தை பாகிஸ்தானில் நிறுத்தி வைப்பது உட்பட அமெரிக்காவின் 11 கோரிக்கைகளை ஏற்கனவே பாகிஸ்தான் நிராகரித்தது. இதன்படி அமெரிக்காவில் இருந்து பாகிஸ்தானுக்கு வரும் இராணுவத்தினர் பாகிஸ்தான் சட்டத்துக்கு கட்டுப்படமாட்டார்கள் என்று அமெரிக்கா கூறியிருந்தது.
பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை நேரடியாகப் பார்வையிட அமெரிக்கா மேற்கொள்ளும் பயங்கரமான முயற்சி இது என்று பாகிஸ்தானின் பாதுகாப்பு விவகாரங்களை ஆராயும் ஷிரீன் மசாரி கூறினார்.
அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு வந்தனர். பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் பாதுகாப்பான சூழ்நிலையில் இருப்பதாக அவர்கள் திருப்தி தெரிவித்தனர். இந்நிலையில், புதிய கோரிக்கையை அமெரிக்கா முன் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.