சீன அரசுடன் தனது பிரதிநிதிகள் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனரென திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா தெரிவித்துள்ளார்.
ஆன்மீகச் சொற்பொழிவொன்றிற்காக வாஷிங்டன் சென்றுள்ள தலாய்லாமா அங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;
தனியார் சிலர் மூலமாக சில முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த பேச்சுவார்த்தையின்போது என்ன பேசப்பட்டது என்பது மர்மமாகத் தான் உள்ளது. முழுமையாக தெரியவில்லை. இதுபற்றி எதையும் கூற விரும்பவில்லை. சீனாவுடன் நேரடியாக தொடர்புகொள்ளவில்லை.
சீனாவில் இருந்து பிரிந்து தனி நாடு காண நான் முயல்வதாக சீனா என்மீது குற்றஞ்சாட்டி உள்ளது. இந்த குற்றச்சாட்டு தவறானது. நான் பிரிவினை கோரவில்லை. விடுதலை கோரவில்லை என்பது உலக நாடுகள் அனைத்துக்கும் தெரியும்.
உள்விவகாரங்களை நாங்களே கவனித்துக்கொள்ளும் அளவுக்கு சுயாட்சி வேண்டும் என்று தான் நாங்கள் கோருகிறோம். இது தொடர்பாக சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.
எங்கள் போராட்டம் சீனமக்களுடன் இல்லை. அதிகாரத்தில் உள்ள ஒரு சிலருடன் தான். இப்போது உள்ள நிலைமை தொடர்ந்தால் திபெத்தில் சீன அரசாங்கம் அடக்குமுறையை கட்டவிழ்த்து விடும். இது கவலை அளிக்கும் விஷயம். திபெத்தியர்கள் மேலும் மேலும் ஒடுக்கப்படுவார்கள்.
திபெத்தில் வன்முறைகள் நீடிக்குமானால், அது அத்துமீறி போகுமானால் நான் பதவி விலகிவிடுவேன். திபெத்தில் என்ன நடக்கிறது என்பதை வெளி உலகம் அறிய வேண்டும்.
எனவே திபெத்தில் வெளிநாட்டினர், சுற்றுலா பயணிகள், பத்திரிகையாளர்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடையை சீனா ரத்துச் செய்ய வேண்டும். அவர்கள் திபெத்துக்குள் நுழைந்து அங்குள்ள நிலைமையை நேரில் பார்க்க அனுமதிக்க வேண்டும்.
சீனாவில் ஒலிம்பிக் போட்டி நடப்பதற்கு என் முழு ஆதரவு உண்டு. ஆனால், தொடக்க விழாவை புறக்கணிப்பது பற்றி சம்பந்தப்பட்ட, நாடுகளின் தலைவர்கள் தான் முடிவு செய்ய வேண்டுமென தெரிவித்தார்.