சுன்னாகம் நகரை வளமுள்ள விவசாய கைத்தொழில் நகரமாக மாற்றுவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் சிறிய தேநீர் கடைகள் இருந்த இடமாக சுன்னாகம் இருந்ததை நாம் அறிவோம். இன்று அந்நகரம் படிப்படியாக வளர்ச்சியடைந்து வருவது எமக்கெல்லாம் பெருமை தருகின்றது.
இங்கு பலகோடி ரூபா செவில் அரச கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. மக்களின் சேமிப்புத்தான் நாட்டின் அபிவிருத்திக்கு அச்சாணியாக அமைந்துள்ளது. ஒருநாடு பொருளாதாரத்தில் சிறந்து விளங்க வேண்டுமானால் மக்களின் சேமிப்பு அதிகரிக்க வேண்டும். இந்த வகையில் எனது பிரதேசத்தில் மக்கள் வங்கிக் கிளையின் பணி அளப்பரியது.
இவ்வாறு உடுவில் பிரதேச செயலாளர் செல்வி மஞ்சுளாதேவி தனபாலன் சுன்னாகம் மக்கள் வங்கிக்கிளையில் புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற வனிதாவாசனாவ அதிர்ஷ்ட லாப சீட்டிழுப்பு மற்றும் கடந்த வருடம் நடைபெற்ற மக்கள் வங்கி ஜயசிறி சீட்டிழுப்பில் சுன்னாகம் மக்கள் வங்கிக் கிளை வாடிக்கையாளர்களில் பரிசு பெற்றவர்களுக்கான பரிசில்களை வழங்கும் வைபவத்தில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வுக்கு சுன்னாகம் மக்கள் வங்கி உதவிப் பொது முகாமையாளர் திருமதி எப்.ஆர்.இராவீந்திரகுமார் தலைமைதாங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர்; ஒரு குடும்பத்தலைவியே குடும்பத்தில் சிக்கனத்தைக் கடைப்பிடித்து தனது குழந்தைகளின் நல்வாழ்வுக்காக சேமிப்புகளை ஏற்படுத்த முடியும். சிறுவயதில் சேமிக்கப்படும் பணம் நமது குழந்தைகளின் நல்வாழ்வுக்கு எதிர்காலத்தில் பெருவிருட்சமாக மாறிவிடும். இதனால்தான் மக்கள் வங்கி பெண்களுக்கான சேமிப்புத் திட்டங்களை உருவாக்கி அதில் அவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதற்காக அதிர்ஷ்ட சீட்டிழுப்புகளை வருடாவருடம் நடாத்தி வருகின்றது.
குடும்ப வாழ்வின் மகிழ்ச்சி நாம் எதிர் காலத்துக்காக சேமிப்பில் இடும் பழக்கத்தைக் கொண்டிருக்கவேண்டும். திருநெல்வேலி மக்கள் வங்கியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுமிகளில் ஒரு சிறுமிக்கு 50,000 ஆயிரம் ரூபா பரிசும், அவருடைய சகோதரியான மறு சிறுமிக்கு 185,000 ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள் ஜயசிறி பரிசுத் திட்டத்தில் கிடைத்திருக்கின்றது என கேள்விப்படும்போது நாமெல்லாம் மகிழ்ச்சியடையாமல் இருக்கமுடியாது.
அதிர்ஷ்டம் எப்போதும் எம்மைத் தேடிவரும், எல்லோரும் சேமிப்புப் பழக்கத்தைக் கொண்டிருப்போமானால், அதனால் எமக்குத்தான் நன்மை மட்டுமல்ல, நாட்டின் அபிவிருத்திக்கும் நாம் எமது கடமையைச் செய்கின்றோம் என மனமகிழ்ச்சியுடன் வாழ்வோம் என்றார்.
கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்ட மக்கள் வங்கி உதவிப் பொதுமுகாமையாளர் ஏ.ரி.ஆனந்தராஜா அங்கு உரையாற்றுகையில்; மக்கள் வங்கி ஆரம்பிக்கப்பட்டு நாற்பது ஆண்டுகள் கடந்தாலும், ஒருகோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட முதன்மையான வங்கியாக செயற்பட்டு வருகின்றது. மக்களுக்கும் வங்கி வாடிக்கையாளர்களுக்கும் இடையே நல்லுறவு மக்கள் வங்கியில்தான் சிறப்பாகவுண்டு என "மக்கள் விருது" எமது வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் தமிழ், சிங்கள புத்தாண்டில் பணப்பரிமாற்றம் செய்பவர்களுக்கு அவர்களை கௌரவித்து கைவிஷேடம் வழங்கும் நடைமுறையை முதல்முதலில் ஆரம்பித்த பெருமைக்குரிய வங்கியாக மக்கள் வங்கி சிறப்புப்பெறுகின்றது என்றார்.
சுன்னாகம் மக்கள் வங்கி கிளை முகாமையாளர் மா.சந்திரகாந்தன், யாழ்.மாவட்ட மக்கள் வங்கி உதவிப்பொது முகாமையாளர் எல்.ஆர்.ஹென்டு உட்பட பலர் உரையாற்றினார்கள்.