சைவ சமயிகள் வழிதவறிச் செல்லாதிருப்பதை உறுதிசெய்வதும் சைவ சமய அனுஷ்டானங்கள், ஆசாரங்கள் மற்றும் விழுமியங்கள் பேணிப்பாதுகாக்கப்படுவதும் அறநெறிப் பாடசாலைகளின் பங்களிப்பில் தான் முற்றாகத் தங்கியுள்ளது என்ற கருத்து திருகோணமலை ஆனந்தபுரி நாகசக்தி அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வில் சமயப் பெரியார்களினால் வலியுறுத்தப்பட்டது.
திருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான ஆதீனகர்த்தா வேதாகமமாமணி பிரம்மஷ்ரீ சோ.இரவிச்சந்திரக் குருக்களினால் பொறுப்பேற்கப்பட்டு நடத்தப்பட்டு வரும் நாகசக்தி அறநெறிப்பாடசாலையின் ஆசிரியர்களுக்கு சம்பளம் புத்தகங்கள், கற்றல் உபகரணங்கள், மாணவர்களுக்கான சீருடை முதலியவற்றை தேவஸ்தானமே வழங்கிவருகின்றது. சீருடை வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை அகில இலங்கை `சைவன்' நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் அறநெறிப்பாடசாலை மண்டபத்தில் நடத்தப்பட்டது.
வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் திருமதி ரமேஷ் விஜயலட்சுமி இதில் பிரதம அதிதியாகப் பங்குபற்றினார். ஆனந்தபுரி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் சி.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். திருகோணமலை ஆலடி விநாயகராலய ஆதீனகர்த்தா ஷ்ரீலஷ்ரீ மு.சுந்தரலிங்க தேசிகர் வரவேற்புரையில்; சைவ சமயிகள் வழிதவறிப்போகக் கூடாது சைவம் சைவமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
ஆதீனகர்த்தா இரவிச்சந்திரக் குருக்கள் தனது ஆசியுரையில் `அறநெறிப்பாடசாலைகளின் வளர்ச்சிக்கு சைவ சமூகம் ஆக்கமும் ஊக்கமும் அளிக்க வேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் தவறாது அறநெறிப் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். வீடுகளில் சுவாமி அறையில் குழந்தைகள் தேவாரம் பாடக் கற்றுக்கொடுக்க வேண்டும். சமயம் சமயச் சார்பான விழுமியங்கள் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும்' என்று கூறினார்.
பிரதம அதிதியான திருமதி ரமேஷ் விஜயலட்சுமி பேசும்போது; பெற்றோர் ஆசிரியர்கள் எதிர்கால சந்ததியினருக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுதல் வேண்டும். போதிப்பதை விட்டு வாழ்ந்து காட்டுதல் மூலமே பெற்றோரும் ஆசிரியரும் இளஞ்சந்ததியினரின் உள்ளங்களில் அறநெறி விழுமியங்களை ஊன்றச் செய்ய முடியும்.
எம் பண்டைய பாரம்பரியங்கள், பண்பாட்டு விழுமியங்கள் அருகி வருகின்றன. இவற்றைப் பாதுகாத்து இளம் தலைமுறையினரிடம் ஒப்படைக்க வேண்டும். கல்வி ஒழுக்கத்தைப் போதிப்பதாக அமைய வேண்டும்; அகம்பாவத்தை அல்ல என்றும் திருமதி விஜயலட்சுமி கூறினார்.
காந்திப் பெரியார் பொ.கந்தையா பேசும்போது;
குழந்தைகள் நன்றாகப் படித்து நல்ல பிள்ளைகளாக வளர வேண்டும். அக் காலத்தில் 100 இற்கு ஐந்து, பத்துப் பேர்தான் கூடாதவர்களாகக் காணப்பட்டனர். இன்று 100 இற்கு ஐந்து அல்லது பத்துப் பேர்தான் நல்லவர்களாகக் காணப்படுகின்றனர். மனிதன் புலால் உண்ணக்கூடாது. நாக்கு ருசிக்கு இன்று மனிதன் அடிமைப்பட்டு விட்டான். காய்கறி உண்பவனாக மனிதன் இருக்க வேண்டும் என்று கூறினார்.
தலைமையுரையில் சைவ சமய வளர்ச்சிக்காகச் செயற்படும் அமைப்புக்கள் தங்களுக்கிடையேயான முரண்பாடுகளை ஒதுக்கிவிட்டு சமயத்தையும் அதன் விழுமியங்களையும் பேணிப்பாதுகாக்கும் நோக்குடன் பொது வேலைத்திட்டம் ஒன்றைத் தயாரித்துச் செயற்பட வேண்டும் என்று சி.பாலசுப்பிரமணியம் கேட்டுக்கொண்டார். அலஸ்தோட்டம் மாதுமையம்பாள் வித்தியாலய அதிபர் திருமதி பரஞ்சோதி விமலாதேவி, திருமலை சர்வோதய மாவட்ட இணைப்பாளர் வேல்முருகு ஜீவராஜ், இலங்கை இந்து இளைஞர் பேரவை பொதுச் செயலாளர் செ.சிவபாதசுந்தரம், திருமலை இந்து இளைஞர் பேரவை பொதுச் செயலாளர் செ.விஜயசுந்தரம், வி.கருணானந்தசிவம் மற்றும் பலரும் பேசினர். அகில இலங்கை `சைவன்' நற்பணி மன்றப் பொதுச் செயலாளர் இ.நாகேந்திரராஜா நிகழ்ச்சிகளை நடத்தினார்.