* சோமவன்ச குற்றச்சாட்டு; விமலின் கட்சி விரோத நடவடிக்கை குறித்தும் விளக்கம்
இராணுவ செயற்பாடுகளுக்காக மக்களின் வாழ்க்கைச் செலவீனத்தை அதிகரித்தல் அல்லது ஊழல் ஆகியவை தொடர்பில் அரசாங்கத்தை விமர்சிக்கக் கூடாதென்பதில் விமல் வீரவன்ச பிடிவாதமாகவிருந்ததாகத் தெரிவித்துள்ள ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, விமல் வீரவன்சவுக்கும் ஜே.வி.பி.க்குமிடையிலான பிரச்சினைக்கு பின்னால் சில முதலமைச்சர்கள், அரச அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் தொடர்பிருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
ஜே.வி.பி. கட்சியின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற குழுத் தலைவருமான விமல் வீரவன்சவின் கட்சி விரோத நடவடிக்கைகள் என்ன? என்று அதன் தலைவர் சோமவன்ச அமரசிங்க விளக்கியுள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இது தொடர்பில் கூறியுள்ளதாவது;
தேசப் பாதுகாப்பு மற்றும் கணிசமான பொருண்மிய வளர்ச்சி ஆகியவற்றை எட்டுவதற்காக 2005 ஆம் ஆண்டு மகிந்த அரசாங்கத்துடன் நாம் இணைந்தோம். அதற்கான செயல்திட்டம் உருவாக்கப்பட்டது. நாங்கள் அதன் மீது விவாதங்களைத் தொடங்கினோம். ஆனால், அரசாங்கம் அதனை நிராகரித்தது. புரிதலுக்கு அரசாங்கம் வரவில்லை. ஆனால், நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயாராக இல்லாதவர்கள் என்ற தோற்றத்தை மக்களிடம் உருவாக்கவே அந்த உத்தியை அரசாங்கம் கடைப்பிடித்து.
அதிகாரபூர்வமான விவாதங்களுக்கு முன்னரே கரு ஜயசூரிய தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் அதிருப்திக் குழுவுக்கு ஜனாதிபதி கடிதம் அனுப்பினார். அதிகாரபூர்வ பேச்சுகள் முடிவடையாத நிலையில் அவரின் இந்த செயற்பாட்டை நாம் ஏற்கவில்லை. இறுதியாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை கைவிட முடியாது என்றும் அமைச்சரவை எண்ணிக்கையைக் குறைக்க முடியாதும் என்றும் அரசாங்கம் எங்களிடம் சொல்லிவிட்டது. இறுதியாக கரு தரப்பினர் அரசாங்கத்துடன் இணைந்தனர்.
அப்போது ஊடகவியலாளர்களிடம் இந்த அரசாங்கத்துக்கு எங்களுடன் இணைந்துகொள்ள விருப்பமில்லை என்றோம். ஆனால், ஜனாதிபதியோ நாங்கள் தான் விரும்பவில்லை என்று கூறினார். அது உண்மையல்ல. எமது கட்சியின் மத்திய குழு அத்தகையதொரு முடிவெடுத்திருக்கும் நிலையில் அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட முடியாது. மத்திய குழுவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் முடிவுசெய்ததே கட்சியின் நிலைப்பாடு. மக்களின் முன்பாக நாம் எமது தனிப்பட்ட நிலைப்பாட்டை முன்வைக்க முடியாது. ஆனால், கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் விமல் வீரவன்சவை ஒப்புக்கொள்ள வைக்க எங்களால் இயலவில்லை. கட்சியின் முடிவை கட்சியின் அரசியல் யாப்பை விமல் நிராகரித்தார். அவரது பேச்சுகளிலும் ஊடக கட்டுரைகளிலும் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலும் கட்சியின் நிலைப்பாட்டை அவர் மறுத்தலித்துவந்தார்.
விமலின் பேச்சுகளையும் எழுத்துகளையும் எவரேனும் படித்தால் ஜே.வி.பி. இரட்டை நிலைப்பாடு மேற்கொண்டதாகவே தெரியும். ஜே.வி.பி.யைப் பொறுத்தவரையில் கட்சியின் சொந்த மத்திய குழுவைத் தவிர்த்து வெளி இடங்களில் பேசக்கூடாது. தத்துவார்த்தமோ அல்லது மற்ற விடயங்களோ ஒரு குடும்பமாகக் கருதி கட்சிக்குள்தான் பேச வேண்டும். மத்திய குழுவின் முடிவில் மாறுபாடான கருத்து இருந்தாலும் ஒன்றும் செய்ய இயலாது.
வரவு- செலவுத் திட்ட அறிக்கை தொடர்பில் அரசாங்கத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதுதான் விமலின் நிலைப்பாடு. முன்னதாக கொழும்பு விடுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியேற்றிய சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து ஜே.வி.பி.யால் விமலிடமிருந்து அறிக்கையைப் பெற இயலவில்லை. விமல் மறுத்த நிலையில் தனிப்பட்ட முறையில் அநுரகுமார திசாநாயக்கவிடம் நான் கேட்டுக் கொண்டதையடுத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் பாதுகாப்பு தொடர்பிலான பத்தி எழுத்தாளர் இக்பால் அத்தாசின் பாதுகாப்பு குறைக்கப்பட்டதை கண்டித்தும் எம்மால் விமலிடமிருந்து அறிக்கையைப் பெற இயலவில்லை. இத்தனைக்கும் இக்பாலின் மிக நெருங்கிய நண்பர் விமல் வீரவன்ச. அவர் அரசாங்கத்தை காப்பாற்றுவது என்ற தெரிவில் இருக்கிறார். சொந்தக் கட்சிக்கு எதிராக மட்டுமல்ல நண்பருக்கும் கூட அவர் துரோகம் செய்தார். மேலும், ஆயுததாரிகளால் "இருதின" ஊடக நிறுவனம் தாக்கப்பட்டபோது அதனைக் கண்டிக்குமாறு கேட்டுக் கொண்டோம். ஆனால், ஜே.வி.பி.யை தாக்கி எழுதக் கூடிய ஊடகம் அது. அரசாங்கத்துக்கு எதிரான ஊடகம் அதனால் கண்டிக்க முடியாது என்று கூறிவிட்டார்.
அது தற்போதைய பிரச்சினை இல்லை - கருத்துச் சுதந்திரப் பிரச்சினை என்று விளக்கம் அளித்தேன். அப்போதும்கூட அவர் பேச மறுத்துவிட்டார். அதனால் மற்றொரு நபர் மூலம் அறிக்கைவிட வைத்தேன். பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க ஜே.வி.பி.தொடர்ந்தும் அரசாங்கத்தை ஆதரிக்கிறது அதனைத் தோற்கடிக்கும் அதே நேரத்தில் ஜனநாயகம் வலுப்படுத்தப்பட வேண்டும். ஜே.வி.பி.ஒரு இனவாத அமைப்பு அல்ல. ஜே.வி.பி.யின் 42 ஆண்டுகால வரலாற்றில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை இனவாத அடிப்படையில் நாம் காயப்படுத்தியது கிடையாது.
இராணுவ செயற்பாடுகளுக்காக மக்களின் வாழ்க்கைச் செலவீனத்தை அதிகரித்தல் அல்லது ஊழல் ஆகியவை தொடர்பாக அரசாங்கத்தை விமர்சிக்கக் கூடாது என்பதில் விமல் பிடிவாதமாக இருந்தார். இன மோதல்களுக்கு அப்பால் மக்களின் வாழ்க்கைச் செலவீனம் மிக அதிகமாக உள்ளது. போர் முனையில் ஏதும் நடக்கும் என்று மக்கள் பொறுமை காக்கின்றனர். உயர்நிலையில் உள்ளோரின் ஊழலை நாம் கண்டிக்காது போனால் படையினரின் உயிர்த்தியாகங்களுக்கு மதிப்பில்லாமல் போய்விடும். ஊழலைக் கண்டிக்காமல் தெரிந்தோ தெரியாமல் அரசாங்கத்தின் பாதையில் போவது தவறானது. அது எமது மத்திய குழுவின் நிலைப்பாடும் அல்ல. தெரிந்தோ தெரியாமலோ விமல், மத்திய குழுவின் முடிவுகளை மீறியிருக்கிறார். அவர் தெரிந்தே மீறியிருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன். ஏனேனில் பல முறை இது தொடர்பில் விளக்கியிருக்கிறேன். விமல், ஜே.வி.பி.யில் தானாகவே வந்து சேர்ந்தார். அவர் இங்கேயே இருக்க வேண்டும் என்று யாரும் அவரைக் கட்டிப்போடவில்லை.
மத்திய குழுவுடன் பல மாதங்களாக நாம் தத்துவார்த்த மோதல்களை நடத்தி வந்தோம். பெப்ரவரி 26 ஆம் திகதி மத்திய குழுவில் விமல் மீது நானே குற்றஞ்சாட்டினேன். சரியாகச் சொல்லுவதானால் அவர் முதுகில் குத்துகிறார் என்றேன். இப்படிச் செயற்பட நாம் விரும்பவில்லை. நாம் முடிவெடுக்க நேரிடும் என்றும் கூறினோம். கட்சிக்காக எனது பரிந்துரைகளை அனுப்பியிருந்தேன். அவர் மார்ச் 1ம் திகதி மத்திய குழுவில் நிறைவேற்றலாம் என்றார். ஆனால் அப்போதும் முடியவில்லை. மார்ச் 7 ஆம் திகதி கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. கட்சிப் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, லால்காந்த மற்றும் விஜயசிங்க ஆகிய மூவர் அடங்கிய குழுவை விமலிடம் தனித்துப் பேச நியமித்தோம். அவர்களும் சந்தித்தனர். மார்ச் 17 ஆம் திகதி நிறைவேற்றுக் குழு கூடியது. ஆனால் அவர் வரவில்லை, நிறைவேற்றுக் குழு கூட்டப்பட்ட அனைத்து நாட்களும், கூட்டங்களும் முடிவுகளும் விமலுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனால் தனக்குத் தெரியாது என்று அவரால் கூறமுடியாது. நிறைவேற்றுக் குழு உரிய விசாரணைகளுக்குப் பின்னர் முடிவெடுக்கும், விமல் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. கட்சியின் நிலைப்பாட்டை ஏற்க மறுத்தது என்பது கட்சி உள்விவகாரம்.
கட்சியில் இருந்து கொண்டே ஐக்கிய தேசியக் கட்சி - அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.மற்றும் ஏகாதிபத்திய சக்திகளுடன் ஜே.வி.பி.இணைந்து செயற்படுவதாக கூறியுள்ளார். இது பாரதூரமான குற்றச்சாட்டு. நாங்கள் இனியும் அமைதியாக இருக்க முடியாது. இதுவரை நாங்கள் முடிவெடுக்கவில்லை. விமல் இப்போதும் கட்சியின் பிரசார செயலாளர்தான். விமல் இப்போதும் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவர். அவரிடமிருந்து நாங்கள் எதனையும் பறிக்கவில்லை. கட்சியிலிருந்து தன்னை நீக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார். அப்படியாக இருந்தால் அவரை தொடந்தும் பாராளுமன்ற குழுத் தலைவராக ஜே.வி.பி.அனுமதிக்குமா? அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ள 10 உறுப்பினர்களும் கட்சியை விட்டு வெளியேறவில்லை. சுயாதீனமான இயங்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர். கட்சிக்குள் பிரிவுகள் உருவாவது இது முதல் முறையென்றும் அல்ல. ஒவ்வொரு பிரிவுமே தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. கட்சியே வென்றிருக்கிறது. விமலும் அவரது ஆதரவாளர்களும் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். ஜே.வி.பி.யின் அரசியல் யாப்புக்கு மேலே யாரும் இல்லை.
இந்தப் பிரச்சினைக்கு பின்னால் யார் உள்ளனர் என்று நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். சில முதல்வர்கள், அரசாங்க அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு இதில் தொடர்பு உள்ளது. அரசாங்கத்தின் பின்னணி உள்ளதா என்பதையும் நாம் கண்டறிவோம். அரசாங்கத்தின் அமைச்சர்களுடன் விமல் தொடர்ந்து சந்தித்துப் பேசி வருகிறார் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. நாங்கள் அனைத்தையும் நம்பவில்லை. மத்திய குழுவுக்கு விமல் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும். ஒரு இயக்கம் என்ற அடிப்படையில் எமது கட்சியின் கதவுகள் திறந்தே இருக்கின்றன. அவரால் இப்போதும் கட்சியின் மத்திய குழுவுக்கு வர முடியும். அவர் தனக்காக வாதிட முடியும்.
ஒரு நாள் நிச்சயமாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாதையில் விமல் நிற்பார் அரசாங்கத்தில் தான் ஒரு அங்கம் என்ற உண்மையை அவரால் நீண்டகாலம் மறைத்துவிட முடியாது. உடனடியாக அவர் அரசாங்கத்தில் இணைந்து விடமாட்டார். அடுத்த பொதுத்தேர்தல் வரை கூட அவர் காத்திருக்கலாம்.