அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைதீவு, திருக்கோவில், அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளின் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்கள் அண்மையில் நடைபெற்றன.
காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ராம கிருஷ்ணன் திருக்கோவில் பிரதேச செயலாளர் வீ.அழகரெட்ணம், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் யூ.எல்.நியாஸ் தலைமையில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் தேச நிர்மாணத்துறை அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் முன்னெடுத்துச் செல்லப்படவிருக்கின்ற சகல அபிவிருத்திப் பணிகளும் இன, மொழி, கட்சி வேறுபாடுகளின்றி சகலரும் பயன்பெறக்கூடிய வகையில் சரியான முறையில் அமுல்படுத்தப்படுவதுடன், திட்டமிடப்பட்டுள்ள சகல அபிவிருத்திப் பணிகளும் மிக விரைவாக நிறைவுசெய்யப்பட வேண்டும் என்று தேச நிர்மாணத்துறை அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே சகல பிரதேச செயலாளர்களுக்கும் பணிப்புரை வழங்கினார்.
இந்நிகழ்வுகளில் உயர்கல்வி பிரதி அமைச்சர் எம்.எம்.மயோன் முஸ்தபா, மக்கள் பெருந்தோட்ட முகாமைத்துவப் பிரதி அமைச்சர் எஸ்.நிஜாமுதீன், அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஏ.ஏ.பாவா, நெக்டெப் திட்ட பிரதிப் பணிப்பாளர் ஐ.எல்.தௌபீக் உட்பட திணைக்கள உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.