* புத்தல வீதியும் திறக்கப்பட்டது
கதிர்காமம் முருகன் ஆலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு விசேட பூஜை மற்றும் சுவாமி வீதி உலா என்பன சிறப்பாக நடைபெற்றன.
வெளியிடங்களில் இருந்து தமிழ், சிங்கள மக்கள் பெருமளவில் இதில் கலந்து கொண்டனர்.
கடந்த மூன்று மாதங்களாக கதிர்காமம் முருகன் ஆலய பூஜைகள் நடைபெறவில்லை. பக்தர்கள் மற்றும் உல்லாசப் பயணிகளின் வரவும் குறைந்திருந்தது. விடுதிகள், கடைகளும் மூடப்பட்டிருந்தன.
அண்மைக் காலங்களில் இப்பிரதேசத்தில் விடுதலைப்புலிகளின் சில தாக்குதல் சம்பவங்களே இதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.
புத்தாண்டு தினத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, பொது மக்களை வருமாறு நிர்வாகம் அறிவித்திருந்தது.
ஞாயிற்றுக்கிழமை பகல் பக்தர்கள் வரத் தொடங்கினார்கள். இரவு பூஜையின் பின்னர் திங்கட்கிழமை காலையிலும் கதிர்காமத்தில் வழிபட்டனர். உணவுக் கடைகள், வர்த்தக நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.
தொடர்ந்தும் இங்கு பூஜைகளை நடத்தி மக்களை வரவழைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இராணுவத்தினரும் பொலிஸாரும் கதிர்காமத்தில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கதிர்காமத்தில் இருந்து தூர இடங்களுக்கான பஸ் சேவைகளும் நடைபெற்றன.
புத்தல வீதி
விடுதலைப்புலிகளின் அண்மைக் கால தாக்குதல் சம்பவங்களால் புத்தல கதிர்காமம் வீதி கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்தது.
ஞாயிற்றுக்கிழமை காலை இந்த வீதி போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையும் மட்டும் போக்குவரத்து செய்வதற்கு அனுமதிக்கப்பட்டது.
அத்துடன் வாகனங்கள் தனிமையாக செல்லாமல் கூட்டாக சேர்ந்து இவ்வீதியால் செல்ல வேண்டும் என நிபந்தனையும் விதிக்கப்பட்டது.
இந்த வீதியில் 18 இடங்களில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் காவலரண்கள் நிறுவப்பட்டுள்ளதையும் காண முடிகிறது.