இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் உதவிப் பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் கான்ஸ்டபிள் , சாரதி , பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகிய பதவிகளுக்கு நிலவும் வெற்றிடத்துக்கான வாய்ப்பினை பெருந்தோட்டத்துறை இளைஞர், யுவதிகள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென பிரதி சுகாதார அமைச்சரும் பெருந்தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்;
க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் தாய்மொழி, கணிதம் உள்ளிட்டு ஆறு பாடங்களில் சித்தியடைந்த 5 அடி 4 அங்குல உயரமுள்ள 18 வயதிற்கும் 28 வயதிற்குமிடைப்பட்ட ஆண், பெண் இருபாலாரும் பொலிஸ் கான்ஸ்டபிள் பதவிக்கும் க.பொ.த.உயர்தரப்பரீட்சையில் ஒரே தடவையில் மூன்று பாடங்களில் சித்தியடைந்தவர்கள் உதவிப் பொலிஸ் பரிசோதகர் பதவிக்கும் மேற்படி தகைமைகளுடன் இலகுரக வாகனங்கள், கனரக வாகனங்கள் செலுத்துவதற்கான அனுமதிப்பத்திரம் பெற்று ஒரு வருடகால அனுபவமுள்ளவர்கள் பொலிஸ் சாரதிகளுக்கும் விண்ணப்பிக்க முடியுமென்று வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சந்தர்ப்பத்தினை மலையக இளைஞர் , யுவதிகள் நன்கு பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும். மேற்படி பதவிகளுக்கு கோரப்பட்டிருக்கும் தகைமையுடையவர்கள் மலையகத்தில் கணிசமான தொகையினராக இருப்பதனால், எமது இளைஞர், யுவதிகள் முன்வந்து அதற்கான விண்ணப்பங்களை பொலிஸ் திணைக்களத்திற்கு அனுப்பியதன் பின்னர் அவற்றின் பிரதிகள் எனது கவனத்திற்கும் கொண்டு வரப்படும் பட்சத்தில் நியமனங்களுக்கான சிபார்சுகளை என்னால் வழங்க முடியும்.
பதுளை மாவட்ட தமிழ் மக்களின் வாக்குப் பலத்தினால் எமது சமூக இளைஞர், யுவதிகளை அரசின் பல்வேறு துறைகளிலும் ஈடுபடுத்தக் கூடியதாக இருக்கின்றது. அதன் ஒரு அங்கமாக இப் பொலிஸ் சேவையிலும் எம்மவர்களை உள்வாங்க வைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.
மேற்படி பொலிஸ் திணைக்கள ஆட்சேர்ப்புகளினது நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி பதுளை, பண்டாரவளை ஆகிய இடங்களிலும் 25 ஆம் திகதி இரத்தினபுரி, பலாங்கொடை ஆகிய இடங்களிலும் அடுத்த மாதம் 2 ஆம் திகதி கண்டி, மாத்தளை ஆகிய இடங்களிலும் 23 ஆம் திகதி நுவரெலியா, அட்டன், வலப்பனை ஆகிய இடங்களிலும் நடைபெறவுள்ளன.
இது தொடர்பாக மேலதிக விபரங்களை அறிய விரும்பின் என்னுடன் நேரடியாகவோ, கீழ்க்காணும் தொலைபேசி இலக்கங்களுடனோ தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றேன்.0777-569299, 077-3696600, 011-2681481, 055-222-5580.