* கஜேந்திரன் எம்.பி.குற்றச்சாட்டு
தமிழ் மக்களின் சுயாட்சிப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் சதியாகவே துப்பாக்கி முனையில் யாழ்.மக்கள் தொகைக் கணிப்பீட்டை இலங்கை அரசு வெளியிட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் குற்றஞ் சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
யாழ். மாவட்ட கச்சேரியினால் அண்மையில் யாழ்.மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகை கணிப்பீட்டின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இம் மக்கள் தொகைக் கணிப்பீடானது தற்போதைய போர்ச் சூழலில் அங்கு வாழும் மக்களின் நலன்களை கருத்தில் கொள்ளாது சிங்கள, பௌத்த மேலாண்மை வாதிகளின் கபடத்தனமான அரசியல் உள்நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி மக்கள் தொகை 6 இலட்சத்திற்கும் மேற்பட்டதாக உள்ளது.
யாழ்.குடாநாட்டில் உள்ள 40,000 இராணுவத்தினரதும் துணை இராணுவக் குழுவினரதும் பொதுமக்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், சித்திரவதைகள், கடத்தல்கள், கொலைகள், பாலியல் வல்லுறவுகள், கொள்ளைகள் போன்ற வன்முறைகளால் அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் யாழ். குடாநாட்டிலிருந்து படிப்படியாக வெளியேறி வன்னியிலும் தென்னிலங்கையிலும் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் வாழ்ந்துவருகின்றனர்.
அதனைவிட பல நூற்றுக்கணக்கானவர்கள் படையினரால் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளதுடன், பல நூற்றுக்கணக்கானவர்கள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைந்துள்ளனர். மேலும் பல நூற்றுக்கணக்கானவர்கள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக யாழ்.குடாநாட்டிற்குள்ளே தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்தகையதொரு நிலையில் மேற்கொள்ளப்பட்ட மேற்படி மக்கள் தொகைக் கணிப்பீடானது பாராளுமன்ற உறுப்பினர்கள், குடாநாட்டிலுள்ள அரசாங்க அதிகாரிகள், கல்விமான்கள், பொதுமக்கள் ஆகியோரினது விருப்பத்திற்கு மாறாக அவர்களது எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே மேற்கொள்ளப்பட்டது.
யாழ்.குடாநாட்டில் உள்ள கச்சேரி மற்றும் பிரதேச செயலகங்களில் உள்ள அதிகாரிகளும் கிராமசேவையாளர்களும் படையினரால் மிரட்டப்பட்டு பலவந்தமாகவே இந்த சனத்தொகைக் கணிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே கல்வி, பொருளாதார ரீதியாக ஒடு க்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள குடாநாட்டு மக்கள் அரசியல் உள்நோக்கம் கொண்ட வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இம் மக்கள் தொகைக் கணிப்பீட்டினால் மேலும் மேலும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படலாம் என்னும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்திலிருந்து பல்கலைக் கழகத்திற்கும் ஏனைய உயர் கல்வி கற்கை நெறிகளுக்கும் மாணவர்களை அனுமதித்தல், பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்தல், மாவட்ட அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள், மாவட்டத்திற்கான அபிவிருத்த நிதி ஒதுக்கீடுகள், தொழில் வாய்ப்புகள் வழங்குதல் போன்றவற்றின்போது இம் மக்கள் தொகைக் கணிப்பீடு கவனத்தில் கொள்ளப்படுமாயின் பெரும் பாதிப்பு ஏற்படும்.
ஏற்கனவே, உயர் பாதுகாப்பு பிரதேசங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீள் குடியமர்த்துவதற்கு குடியிருப்பாளர்கள் நேரில் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டுமென்ற நிபந்தனை காரணமாக மீள் குடியமர்வு என்பது சாத்தியமற்றதாகவே உள்ள நிலையில், தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மீறும் வகையில் அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்ட இம் மக்கள் தொகைக் கணிப்பீட்டினை வெளியீடு செய்ததன் மூலம் தமிழ் மக்களின் மக்கள் தொகை தொடர்பாக குறைந்தளவான புள்ளிவிபரங்களை வெளியீடு செய்தன் மூலம் சுயாட்சி கோரி போராடும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை பலவீனப் படுத்துவதற்கு சிங்களத் தரப்பு மேற்கொள்ளும் சதி நடவடிக்கையாகவும் இதனை நாம் கருதுகின்றோம்.
ஜனநாயகத்திற்கு முரணான வகையில் துப்பாக்கி முனையில் அரசினால் மேற்கொள்ளப்பட்ட மேற்படி மக்கள் தொகைக் கணிப்பீட்டினை அரசு உடனடியாக செல்லு படியற்றதாக அறிவிக்க வேண்டும் என்பதுடன் அனைத்துலக மனித உரிமை அமைப்புகளும் இந்த விடயத்தில் உரிய அக்கறை செலுத்தவேண்டுமென கோருவதாகவும் கஜேந்திரன் தெரிவித்தார்.