* அமைச்சர் பௌஸி கூறுகிறார்
ரொஷான் நாகலிங்கம்
தற்போதைய சூழ்நிலையில் இன்னும் சிறிது காலத்துக்கு எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டதென பெற்றோலிய பெற்றோலிய, வள அபிவிருத்தித்துறை அமைச்சர் ஏ.ஏச்.எம்.பௌஸி தெரிவித்தார்.
உலக சந்தையில் ஏற்படும் விலையுயர்வுக்கு ஏற்ற வகையில் பெற்றோலியக் கூட்டுதாபனத்துக்கும் நுகர்வோருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஆராய்ந்து எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதாகவும் தெரிவித்தார்.
மார்ச் மாதத்தில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நஷ்ட ஈட்டு பாதுகாப்பு உடன்படிக்கையை அமெரிக்க சிற்றி வங்கியுடன் மேற்கொண்டதை அறிவுக்கும் முகமாக இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் பேசுகையில்;
மக்களின் நலன் கருதி பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நட்டத்தை எதிர்நோக்கி வருகின்றது. இவ்வாறான நட்டத்தை ஓரளவேனும் ஈடுசெய்வதற்காக மார்ச் மாத்தில் அமெரிக்க சிற்றி வங்கியுடன் நஷ்டத்தை ஈடு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை மூலம் கூட்டுத்தாபனத்துக்கு 5.4 மில்லியன் இலாபம் ஏற்பட்டது.
இந்த உடன்படிக்கையின் சாதக பாதக தன்மையை ஆராய்ந்தே இதனை சிற்றி வங்கியுடன் மேற்கொண்டோம். நுகர்வோரின் நலன் கருதியே நாம் இதில் ஈடுபட்டோம். மேலும், நுகர்வோர் நன்மை பெறும் வகையில் கூட்டுத்தாபனம் தனது சுத்திகரிப்பு தொழில் துறை விரிவாக்கல் உட்பட பல்வேறுபட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இது மிக ஆபத்தான சூதாட்ட விளையாட்டு. இதில் நாம் வெற்றி பெற்றால் அமைதியாகவிருப்பார்கள். தோல்வியுற்றால் ஏன் இதில் ஈடுபட்டனர் என்று தொடர்பில் பல்வேறுபட்ட விமர்சனங்களை மேற்கொள்வர். நாம் சிறியளவிலேயே சிற்றி வங்கியுடன் மேற்கொண்டோம். ஏனெனில் எமக்கு பாதகமாயினும் சிறிதளவிலேயே நாம் நட்டத்தை எதிர்நோக்குவோம் என்பதே இதற்குக் காரணமாகும்.
உலக சந்தையில் எண்ணெய் விலை 112 டொலரை எட்டியுள்ளது. உலக சந்தையில் அதிகரிப்பு ஏற்படும் போது எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படுகின்றோம்.
எண்ணெய் விலையதிகரித்தால் எரிபொருட்களின் விலையதிகரித்து பணவீக்கம் ஏற்படும். இதனால் அரசைக் கலைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவர். இதனைக் கட்டுப்படுத்த இராணுவத்தினர் அரசைப் பொறுப்பேற்பர். உலகில் ஜனநாயக அரசு இல்லாமல் போகின்றதை நாம் காணலாம்.
நாம் எரிபொருட்களின் விலையை அதிகரித்தால் பத்திரிகையில் கேலிச் சித்திரம் வரைகின்றனர். எண்ணெய் விலையை குறைப்பதற்காக நான் ஈரானுடன் பேச்சு வார்த்தை மேற்கொண்டுள்ளேன். அது போல் மிக விரைவில் ரோமில் உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்குமிடையிலான பேச்சு என்னும் தலைப்பில் மிக விரைவில் நடைபெறவுள்ள மாநாட்டுக்கு செல்லவுள்ளேன்.
இந்தக் கூட்டத்துக்கு ஒபெக் அமைப்பின் தலைவர் வருகை தரவுள்ள நிலையில், இலங்கை நுகர்வோர் என்ற நிலையில் எமது நிலைமையை அவரிடம் எடுத்துரைத்து இது தொடர்பில் இலங்கைக்கு உதவுமாறு நான் கோரவுள்ளேன்.
உலக சந்தையில் எண்ணெய் விலையதிகரித்ததன் காரணமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தனது நட்டத்தைத் தவிர்ப்பதற்காக கடந்த ஜனவரியில் எரிபொருட்களின் விலைகளை உயர்த்தியது.எனினும் இது வரை மக்கள் நலன் கருதி நிவாரணங்களை வழங்குவதால் 523 கோடி நட்டம் ஏற்பட்டது.
எனினும் இன்னும் சிறிது காலத்துக்கு எரிபொருட்களின் விலைகளை உயர்த்துவதற்கான சாத்தியம் இல்லை. உலக சந்தையின் விலைகளை அடிப்படையாக வைத்தே எதிர்காலத்தில் எரிபொருட்களின் விலைகளை நுகர்வோருக்கும் கூட்டுத்தாபனத்துக்கும் பாதகம் ஏற்படாத வகையில் ஆராய்ந்து தீர்மானிக்கவுள்ளதாகவும் அமைச்சர் பௌஸி கூறினார்.
இந்நிகழ்வில் 5.4மில்லியன் தொகை காசோலையை சிற்றி பாங்கின் இலங்கைக்கான தலைவரும் உயர் நிறைவேற்று அதிகாரியுமான டெனிஷ் ஹஸி அமைச்சர் ஏ.ஏச்.எம்.பௌஸியிடம் கையளித்தார்.