அநுராதபுரம் விமானப்படைத் தளம் மீது கடந்த வருடம் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக நடைபெறும் விசாரணையில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அநுராதபுரம் விமானப்படைத் தளத்தின் மீது கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி 21 பேரடங்கிய விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணி தாக்குதல் தொடுத்தபோது முகாமிலிருந்த விமானப்படையின் ஆயுதக் களஞ்சியத்தின் திறப்பு உரிய இடத்தில் இருக்காமையால் படையினருக்கு உரிய ஆயுதங்களை வழங்க இயலாமல் போய்விட்டதாக ஐவரடங்கிய விசாரணைக் குழு கண்டறிந்துள்ளது.
தாக்குதல் தொடங்கிய 20 நிமிடங்களின் பின்னரே ஆயுதக் களஞ்சியத்தின் திறப்பை படையினர் கண்டுபிடித்துள்ளதாக அந்த விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
ஐவரடங்கிய விசாரணைக் குழுவில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரணகொட, மேஜர் ஜெனரல் எம்.ஏ.எம்.பீரிஸ், ரியர் அட்மிரல் ஜே.எஸ்.கொலம்பகே, ஏயார் வைஸ் மார்சல் ரவி அருந்தவநாதன், மேஜர் ஜெனரல் பீ.எல்.பெர்ணான்டோ மற்றும் கொமாண்டர் கே.ஏ.எஸ்.பெர்ணான்டோ ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
தேநீர் இடைவேளையின்போது விடுதலைப் புலிகள் இந்த விமானப்படைத் தளத்திற்குள் புகுந்துள்ளதாகக் குறிப்பிடும் விசாரணைக் குழுவானது விடுதலைப் புலிகளின் இரு விமானங்கள் முகாமின் மீது குண்டுகளை வீச வந்தபோது முகாமிலிருந்த விமான எதிர்ப்பு ஏவுகணைகள் செயற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
அநுராதபுரம் விமானப்படைத் தளப் பிரதேசத்தில் வெடிச்சங்கள் கேட்டவுடனேயே கவச வாகனத்துடன் உடனடி தாக்குதல் அணியொன்று அங்கு விரைந்துள்ளது. அந்தக் குழுவை `கடேட்' அதிகாரியொருவர் வழிநடத்தியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
குறைந்த பட்சம் அந்த வாகனத்தில் தகவல் பரிமாற்றக் கருவியொன்று கூட இருக்கவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தாக்குதல் அணிக்கு அனுபவம் வாய்ந்த அதிகாரியொருவர் இருக்கவேண்டியபோதிலும் அவ்வாறான ஒருவர் இருக்கவில்லை என்றும் அந்த விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
விமானப்படைத் தளத்தின் 3 இடங்களில் இருந்த படையினர் விடுதலைப் புலி உறுப்பினர்களின் பிரவேசத்தைத் தடுத்து நிறுத்த முடியாது போய்விட்டதால் விடுதலைப் புலிகளால் எம்.ஐ.-24 ரக தாக்குதல் ஹெலிகொப்டர் மீது தாக்குதல் நடத்த முடியுமாக இருந்ததாகவும் காவலுக்கு இருந்த அந்தப் படையினர் போதியளவு அனுபவம் உள்வர்களல்ல என்றும் அந்த விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
அநுராதபுரம் விமானப் படைத்தளத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்காக விடுதலைப் புலிகளின் 3 குழுக்கள் வந்துள்ளதாகவும் மூன்றாவது குழுவானது தந்திரிமலையூடாக வன்னிக்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும் அந்த ஐவரடங்கிய விசாரணைக் குழுவின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்த விசாரணைக் குழுவானது விமானப் படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் 18 பேரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளது.
விடுதலைப் புலிகள் அநுராதபுரம் தளத்தின் மீது தாக்குதல் தொடுத்தபோது விமானிகளுக்கான அனுபவம் கொண்ட குரூப் கப்டன் ஒருவரே முகாமின் கட்டளையதிகாரியாக செயற்பட்டுள்ளார் என்றும் விசாரணைக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.