* இடமளிக்க வேண்டாமென வேண்டுகோள்
"கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற சில கட்சிகள் இனவாதத்தை கக்கி தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரித்து வெற்றிகாண்பதற்கு கனவு காண்கின்றனர். இத்தேர்தலானது மிகப்படுமோசமான இனத்துவேஷத்தை உருவாக்கும் தேர்தலாக அமையப்போகின்றது".
இவ்வாறு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கண்ணாடிச் சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சைக் குழுவினர் கல்முனை `அல்தாப்' ஹோட்டலில் நடாத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் அதன் தலைவர் சட்டத்தரணி லியாக்கத் அலி பேசுகையில் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் பேசுகையில்;
நாம் நடைபெறப்போகும் இத்தேர்தலில் முஸ்லிம்களின் இருப்பை பலப்படுத்தும் நோக்கோடு இம்மாகாணத்தில் இருக்கின்ற முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்களை ஒன்றிணைத்து ஒரேயணியில் போட்டியிடுவதற்காக பள்ளிவாசல் தலைவர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள் ஊடாக முயற்சியை மேற்கொண்டோம். இதற்கு அவர்கள் இணங்காததன் காரணமாகவே நாங்கள் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளாக இன்று சுயேச்சையாக போட்டியிட முன்வந்துள்ளோம்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் ஒரு முக்கிய தேர்தலாகும். தமிழர்கள் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரவேண்டும் என்று கூறுகின்றார்கள். முஸ்லிம்கள் முஸ்லிம் ஒருவரே முதலமைச்சராக வரவேண்டுமெனக் கூறுகின்றார்கள்.
இது இரண்டும் நியாயமான கோரிக்கைகளாகும். அது அவ்வாறு உள்ள நிலையில் அதனை தீர்மானிக்கும் உரிமை மக்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. நடைபெறப்போகும் தேர்தல் மிக மோசமாக இனத்துவேஷத்தினை உருவாக்கும் ஒரு தேர்தலாக அமையப்போகின்றது. இதுவிடயத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் மிகவும் நிதானமாக சிந்தித்து செயற்பட வேண்டும். இந்த மர்ம வலையில் எவரும் சிக்கிவிடக்கூடாது. முஸ்லிம்களின் முதற் தாய் ஒரு தமிழ்ப் பெண் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.
இன்று இம்மாகாண சபைத் தேர்தலில் 22 சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றன. அவை அனைத்தையும் ஒரே அணியின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகளை நாம் தற்போது மேற்கொண்டு வருகின்றோம். எமது பிரதேசத்தில் இருக்கின்ற முஸ்லிம் அரசியல் தலைவர்களை ஒன்றுசேர்த்து தேர்தலில் போட்டியிட மேற்கொண்ட முயற்சி பலனளிக்காமல் போனதாலேயே மக்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப நாம் இத்தேர்தலில் போட்டியிடுகின்றோம்.
ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உருவாகுவதற்கு முன்னர் முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்க யாரும் இருக்கவில்லையென்று நினைத்துவிடக்கூடாது. எம்.ஸீ. கலீல், ஏ.சி.ஏ. ஹமிட் போன்றோர் அன்று முஸ்லிம்களுக்காக குரல்கொடுத்தனர். இன்று முஸ்லிம் அரசியல் தலைமைக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளினால் முஸ்லிம்களின் தனித்துவம் இல்லாமல் போய்விட்டதன் காரணத்தால் உலமாக்கள், பள்ளிவாசல் தலைவர்கள், புத்திஜீவிகள் எம்மை சுயேச்சைக் குழுவாக நிறுத்தியுள்ளனர்.
மாகாண சபைக்கு அதிக அதிகாரம் உள்ள காரணத்தினால் தான் அமைச்சுப் பதவிகளை துறந்து இத்தேர்தலுக்கு குதித்துள்ளனர். 13 ஆவது திருத்தச் சட்டத்தில் மாகாண சபைகளுக்குள்ள அதிகாரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத் தேர்தலானது கிழக்கில் வாழும் அனைத்து இன மக்களினதும் தலைவிதியை நிர்ணயிக்கப்போகின்றதெனத் தெரிவித்தார்.