மலையகத்தில் தபால் விநியோகத்தை சீராக முன்னெடுப்பதற்கு வசதியாக 500 தபால் விநியோக ஊழியர்கள் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் நடைபெறவுள்ளதாக அஞ் சல் துறை பிரதி அமைச்சர் எம்.எஸ். செல்லச்சாமி தெரிவித்தார்.
மேலும், இந்த ஊழியர் நியமனம் தொடர்பாக பிரதி அமைச்சரிடம் வினவியபோது இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து பிரதி அஞ்சல்துறை அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்;
"தோட்டப்பகுதிகளில் தோட்ட நிருவாகங்களே தொழிலாளர்களுக்கான தபால் விநியோகக் கடமைகளை காலாகாலமாக மேற்கொண்டு வந்தன. இதன்மூலம் தோட்டத் தொழிலாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர். இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து தோட்டத் தொழிலாளர்களுக்கு நேரடியாகவே அவரவர்களுக்குரிய தபால்களை விநியோகிக்க அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதனடிப்படையில் பெருந்தோட்டப்பகுதிகளில் தபால் விநியோக ஊழியர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதற்கமையவே நேர்முகப்பரீட்சைகள் நடைபெற்று 500 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர். அடுத்த மாதம் நடுப்பகுதியில் இவர்களுக்கான நியமனங்களும் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம் பெருந்தோட்டத்தொழிலாளர்கள் பெரும் நன்மைகளை அடைவரென்பது திண்ணம். மேலும், மலையகத்தில் உள்ள தபால் அலுவலகங்களின் வளப்பற்றாக்குறை நிலைமைகளை கவனத்தில் கொண்டு அஞ்சல் அலுவலகங்களை தரமுயர்த்தி போதிய வளங்களைப் பெற்றுக்கொடுக்கவும் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும்" அவர் தெரிவித்தார்.