* மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர்
பிரதேசவாதத்தை மக்கள் மத்தியில் விதைத்து அதன்மூலம் சமூகங்களிடையே பிளவை தோற்றுவிக்கும் நபர்கள் குறித்து அவதானமாக செயற்பட வேண்டிய காலம் இதுவென வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
புத்தளம் தம்பபண்ணியில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்தும் அங்கு அவர் உரையாற்றுகையில்;
விளையாட்டுப் போட்டிகள் மாணவர்களுக்கிடையே ஒற்றுமையையும் விட்டுக் கொடுப்பையும் சகிப்புத் தன்மையையும் ஏற்படுத்த வேண்டும். அதற்கு மாறாக வெற்றி பெற்றவர்கள் ஏனைய சக வீரர்களை இகழ்வது அவர்களுக்கு அழகல்ல.
தோல்வியானது வெற்றிக்கான படிக்கல்லாகும் என்ற கருத்துக்கமைய நம்மை நாம் ஒரு முறை மீள் பரிசீலனை செய்து கொள்ள வேண்டும்.
இன்று அரசியல் தலைவர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. அந்த அச்சுறுத்தல் இன்று மனித நேயமிக்க தலைவரான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயினை பலியெடுத்துள்ளது.
இப்படியான காலகட்டத்தில் சில நபர்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு தரப்புகளுக்கிடையில் குரோதத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
இந்த சூழ்ச்சிகளில் மக்கள் சிக்கிவிடக் கூடாது என்பதே எனது ஆசையாகும் என்றார்.
இந்த வைபவத்தில் ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஆலோசகர் ஏ.எச்.எம்.அஸ்வர், இடம்பெயர்ந்த மாணவர்களுக்கான கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியான், அமைச்சின் இணைப்புச் செயலாளர் அலிகான் ஷரீப், வட- கிழக்கு ஆளுநரின் பிராந்திய ஆணையாளர் எஸ்.எல்.டீன் , வடக்கு முஸ்லிம்களுக்கான செயலக ஆணையாளர் எம். முஅயிஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.