எம்.ஏ.எம்.நிலாம்
மே முதல் வாரத்தில் பால்மா, எரிபொருள், எரிவாயு போன்றவற்றின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்படலாமென வர்த்தக வட்டாரங்களிலிருந்து நம்பகமகத் தெரிய வருகின்றது.
இந்த விலை அதிகரிப்பு தொடர்பாக வர்த்தக நுகர்வோர் அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எம்.கே.இரத்னாயக்காவிடம் வினவிய போது அதனை அவர் மறுக்கவில்லை.
சமையல் எரிவாயு, பால்மா போன்றவற்றின் விலைகளில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டுமென அவற்றை இறக்குமதி செய்வோர் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
உலகச் சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை சற்றுக் குறைந்து காணப்படுகின்ற போதிலும் கப்பல் கட்டணங்கள் அதிகரித்துக் காணப்படுவதால் அச் செலவினத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு எரிவாயுவின் விலையை அதிகரிக்க அனுமதிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருப்பதாக இரத்னாயக்கா தெரிவித்தார்.
இதனிடையே உலகச் சந்தையில் பால்மாவின் விலைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போவதாகவும், அதற்கேற்ற விதத்தில் பால்மாவின் விலைகளையும் அதிகரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விலை மாற்றக் கோரிக்கைகள் தொடர்பாக அடுத்த வாரத்தில் நுகர்வோர் அதிகார சபை கூடி ஆராய்ந்து உலகச் சந்தை நிலைவரங்களை கவனத்தில் கொண்டு தீர்மானிக்கப்படவிருப்பதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் இரத்னாயக்கா மேலும் குறிப்பிட்டார்.
இது இவ்விதமிருக்க உலகச் சந்தையில் எரிபொருளின் விலை மீண்டும் அதிகரித்திருப்பதாலும், டொலரின் பெறுமதி அதிகரிப்பதாலும் எரிபொருளின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக பெற்றோலிய அமைச்சு வட்டாரம் தெரிவித்துள்ளது.
இம்மாத இறுதியில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமெனவும் எவ்வளவால் அதிகரிப்பது என்பது பற்றி பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆராய்ந்து வருவதாகவும் கூட்டுத்தாபன வட்டாரம் தெரிவித்துள்ளது.