* புதிய நடைமுறையால் குடும்பங்கள் பிரிந்து செல்லும் அவலம்
மன்னார் மாவட்டத்தை வதிவிடமாகக் கொண்டிராதவர்கள் மன்னார் மாவட்டத்துக்குள் நுழைவதற்கு படையினர் அனுமதி மறுத்து வருகின்றனர்.
மன்னார் மாவட்டத்தை பிறப்பிடமாகக்கொண்டு வேறு மாவட்டங்களில் வசிப்பவர்களும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மன்னார் மாவட்டத்திற்குள் நுழைய படையினரால் அனுமதிக்கப்படவில்லை.
மன்னார் - மதவாச்சி வீதியிலுள்ள கட்டைஅடம்பன் இராணுவ சோதனை நிலையத்தில் வழிமறிக்கப்படும் அனைவரும் அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு, அவர்கள் மன்னாரை வதிவிடமாகக் கொண்டிராவிட்டால் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
மன்னார் மாவட்டத்தை சொந்த இடமாகக்கொண்டு, அங்கு நிலவும் மோசமான பாதுகாப்பு சூழ்நிலையால் வேறு மாவட்டங்களில் வசிக்கும் பெருமளவு மக்கள் மன்னாருக்கு செல்ல முற்பட்டபோதும் கடந்த மூன்று நாட்களாக படையினர் அதற்கு அனுமதி மறுத்துள்ளனர்.
படையினரின் இந்தப் புதிய நடைமுறையால் குடும்பங்கள் பல பிரிந்து திக்குத்திக்காக செல்லும் நிலையேற்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யான வினோநோகராலிங்கம் தெரிவித்துள்ளார்.
படையினரின் இந்தக் கெடுபிடியால் மன்னார் சென்ற பெருமளவானோர் கட்டை அடம்பன் இராணுவச் சோதனை நிலையத்தை தாண்ட முடியாது திரும்பிச் செல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலையேற்பட்டுள்ளது.
இதேநேரம், மன்னாரிலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் தமிழ் மக்கள் மதவாச்சி இராணுவ சோதனை நிலையத்தை தாண்டி வேறிடங்களுக்குச் செல்வதாயின் ரயில் மூலமே செல்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள் பஸ்களிலோ அல்லது வேறு வாகனங்களிலோ தென்பகுதிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.
வவுனியா மாவட்டத்தை சேர்ந்த தமிழ் மக்களுக்கும் படையினர் இதே நடைமுறையையே கடைப்பிடிக்கின்றனர்.
எனினும் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இவ்வாறானதொரு கெடுபிடிகள் எதுவுமில்லையென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.