* சர்வதேச நிபுணர்கள் குழு இறுதி அறிக்கை
மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கான அரசியல் துணிவாற்றல் இலங்கை அரசாங்கத்திடம் போதாது என்று சர்வதேச முன்னணி நிபுணர்கள் சுயாதீனக்குழு தனது இறுதி அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
கடந்த மாதத்துடன் சர்வதேச முன்னணி நிபுணர்கள் சுயாதீனக்குழு விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளை அவதானிக்கும் பணியை உத்தியோகபூர்வமாக நிறுத்தியிருந்தது.
பாரதூரமான மனிதஉரிமை மீறல்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மை கிடையாதெனவும் சர்வதேச தரம் மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்புடையதாக ஆணைக்குழுவின் விசாரணைகள் அமைந்திருக்கவில்லையெனவும் நிபுணர்கள் குழு குற்றஞ்சாட்டியிருக்கிறது.
சர்வதேச முன்னணி நிபுணர்கள் சுயாதீனக் குழுவின் அறிக்கை வருமாறு;
மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட தன்மை, படுகொலைகள், காணாமற் போதல், கண்மூடித்தனமான உடைமைகள் அழிப்பு, மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை என்பன ஒருபோதுமே நியாயப்படுத்தப்பட முடியாதவையாகும். இந்த மாதிரியான நடவடிக்கைகளுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளாமல் அலட்சியமாக இருப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படக்கூடாது.
நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கு சர்வதேச முன்னணி நிபுணர்கள் சுயாதீனக் குழு முன்வைத்திருக்கும் காரணங்களாக;
ஆணைக்குழு அமர்வின் முன்னால் காணப்படும் நலன்களின் முரண்பாடுகள், சாட்சிகளை பாதுகாக்கும் தன்மை குறைவாக இருத்தல், வெளிப்படைத்தன்மை குறைவாகவும் அமர்வுகளின் காலவரையறை மட்டுப்படுத்தப்பட்டதாகவும் இருத்தல், அரச அமைப்புகளிடமிருந்து முழு அளவிலான ஒத்துழைப்பு இல்லாததன்மை, ஆணைக்குழுவிடம் நிதி தொடர்பான சுயாதீனத்தன்மை அருகிக் காணப்படுதல் ஆகியன உள்ளன.
அவதானிப்பு பணியை 2008 மார்ச்சுடன் சர்வதேச முன்னணி நிபுணர்கள் சுயாதீனக் குழு முடித்துக்கொள்வதென தீர்மானித்ததுடன் இலங்கையில் தனது நடவடிக்கைகளை 2008 ஏப்ரலுடன் நிறைவு செய்வதெனவும் முடிவு செய்திருக்கிறது. அடிப்படைக் காரணங்களுக்காக உரிய முறையில் பரிசீலனை செய்தே இந்த முடிவை நிபுணர்கள் குழு மேற்கொண்டிருக்கிறது.
விசாரணை ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை அவதானித்து அது சரியான முறையில் பணியை முன்னெடுப்பதற்கான சிபாரிசுகளை முன்வைக்கவும் சர்வதேச தரத்திற்கு அமைவாக ஆணைக்குழுவின் விசாரணைகள் இடம்பெறுகின்றனவா என்பதை மதிப்பிடவுமே இலங்கை ஜனாதிபதி சர்வதேச முன்னணி நிபுணர்கள் சுயாதீனக் குழுவுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
்தமது தீவிர முயற்சிகளுடன் நடைமுறைச் சூழ்நிலையிலுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் சாத்தியமான அளவுக்கு நிபுணர்கள் குழுவினர் தமது பணியை பூர்த்தி செய்ததுடன் ஆழ்ந்த கவலையுடன் தமது நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடைக்கால அறிக்கையில் குறைபாடுகள் தொடர்பாக ஜனாதிபதியிடமும் மேலும் பகிரங்க அறிக்கைகள் மூலமும் ஆணையாளர்களிடம் நேரடியாகவும் கவனத்திற்கு கொண்டுவந்த போதும் அவை தொடர்பாக அதாவது விமர்சனங்கள், சிபாரிசுகள், தொடர்பாக அதிகளவில் கவனத்தில் கொள்ளப்படாமல் உதாசீனம் செய்யப்பட்டதாகவும் நிபுணர்கள் குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சட்டமா அதிபரின் வகிபாகத்தை மட்டுப்படுத்த ஆணைக்குழு முயற்சிகளை மேற்கொண்டதாகவும் இதுவொரு சிறியளவிலான வெற்றியெனவும் ஆனாலும், சர்வதேச முன்னணி நிபுணர்கள் சுயாதீனக் குழு தொடர்பாக முரண்பாடான சூழலும் இணக்கப்பாடின்மையும் காணப்பட்டதாகவும் அரச அமைப்புகளிடமிருந்தே இவை ஏற்பட்டதாகவும் நிபுணர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது. ஒத்துழையாத சூழ்நிலையே நிபுணர்கள் குழுவின் பணியின் நோக்கத்திற்கும் நம்பிக்கைக்கும் பாதகமாக அமைந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருப்பதுடன் அரசாங்க தரப்பிலிருந்து அரசியல், மற்றும் நிறுவன ரீதியான துணிவாற்றல் இல்லாத தன்மையே சர்வதேச முன்னணி நிபுணர்கள் குழுவுக்கு தென்பட்டதாகவும் அக்குழு கூறியிருக்கிறது.
குற்றவாளிகளை அடையாளம் காணவோ அல்லது முறைமைகளில் காணப்படும் தவறுகளை அடையாளம் கண்டுகொள்ளவோ விசாரணைகளில் வினைத்திறனின்மையால் நீதித்துறைக்கு ஏற்படும் இடையூறுகளை அடையாளம் கண்டு மீளாய்வு செயற்வதற்கோ அரசியல் மற்றும் நிறுவன ரீதியான துணிவாற்றல் அரசாங்க தரப்பிடம் குறைவாக இருப்பதாக தென்படுகின்றது என்றும் நிபுணர்கள் குழு தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக நிபுணர்கள் குழு நன்கறிந்திருந்தது. பொதுமக்கள் தொடர்பாக கவனத்திற்கெடுக்காமல் இரக்கமற்ற முறையில் மோதல்களை மேற்கொண்டுள்ள புலிகளின் கிளர்ச்சியை அரசாங்கம் எதிர்கொண்டுள்ளது. இந்த மோதல்களை இல்லாமல் செய்வதற்குரிய நடவடிக்கைகளாக மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் சட்டவிதிகள் முறையாக அமுல்படுத்த வேண்டுமெனவம் பெரும்பாலானவர்களின் அபிப்பிராயம் காணப்பட்டது. இராணுவ நடவடிக்கைகளை வெற்றிகரமாக ஒருபுறம் மேற்கொள்ளும் போது மறுபுறம் பொதுமக்களின் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். உண்மையில் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது சர்வதேச சட்டத்திற்கு அமைவாக மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும். இவையே கருத்தொருமைப்பாடற்ற சக்திகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான சக்திவாய்ந்த ஆயுதங்களாகும். இதன் மூலமே பொதுமக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்றுக்கொள்ள முடியும். யாவற்றுக்கும் மேலாக பொலிஸார் மற்றும் ஆயுதப்படைகளின் மத்தியில் தொழில்சார் சிறப்புத்தன்மை, சுயமரியாதை கலாசாரத்தை இவற்றின் மூலமே கட்டியெழுப்ப முடியும். ஆனால், தனது சொந்தப் படையினர் மீதான விசாரணையின்போது அவர்களின் செயற்பாடு தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு அரசாங்க தரப்பில் விருப்பமின்மை காணப்படுவதை சர்வதேச முன்னணி நிபுணர்கள் சுயாதீனக் குழு கண்டறிந்துள்ளது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நிபுணர்கள் குழு முன்வைத்திருக்கும் சிபாரிசுகள் வருமாறு:
அரச அமைப்புகள் சர்வதேச தரம், விதிமுறைகளுக்கு அமைய செயற்படுவதை ஜனாதிபதி உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன், ஆணைக்குழுவுக்கு முழுமையான தகவல்களையும் ஒத்துழைப்பையும் அரச அமைப்புகள் வழங்க வேண்டுமென பணிப்புரை விடுக்க வேண்டும்.
இலங்கைச் சட்டத்தின் அங்கமாக இருப்பதும் சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான அதிகாரப் பொறுப்பு என்ற விதிமுறைக்கு இலங்கை அரசாங்கம் மதிப்பளிப்பதுடன் அமுல்படுத்தவும் வேண்டும். அதாவது, குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களின் மேலதிகாரிகளும் பொறுப்பாளிகள் என்ற விதிமுறையை அமுல்படுத்த வேண்டும்.
அத்துடன் சாட்சிகள், பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான வினைத்திறனுடன் கூடிய நிரந்தரமான முறைமையொன்றை ஏற்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். சாட்சிகள், பாதிக்கப்பட்டோரைப் பாதுகாக்கும் பிரிவுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு ஆணைக்குழு போதிய பயிற்சியை வழங்க வேண்டும். இலங்கையை விட்டு வெளியேறிய சாட்சிகளுக்கு தேவைப்படும் வசதிகளை செய்துகொடுக்க வேண்டும். ஒளிப்பதிவு மூலமான சாட்சியம் முழுமையான பாதுகாப்பை தரவல்லதுடன் ஆணைக்குழுவுக்கு சர்வதேச ரீதியான ஆதரவைப் பெறுவதும் முக்கியமானதென்பது நிரூபிக்கப்பட்டதொன்றாக உள்ளது.
பாரதூரமான மனித உரிமை மீறல்களில் பாதுகாப்புப் படையினர் சம்பந்தப்பட்ட வழக்குகளில் சுயாதீனமான விசேட வழக்கறிஞர்களை நியமிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்.
விசாரணை ஆணைக்குழுவுக்கு தேவையான நிதிவளங்களை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
சட்டத்தின் மூலம் விசாரணை ஆணைக்குழுவுக்கு ஆலோசனை உதவி வழங்குபவராக சட்டமா அதிபர் நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் இடமளிக்கக்கூடாது.