* ஜெயசூர்யா கூறுகிறார்
ஐ.பி.எல் போட்டியில் தொடக்க வீரராக டெண்டுல்கருடன் ஆட வேண்டுமென்பதே தனது விருப்பமென இலங்கையணியின் அதிரடி வீரர் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான ஜெயசூர்யா 1996 ஆம் ஆண்டு இலங்கை உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
மேற்கிந்திய தொடருக்கான ஒரு நாள் போட்டியில் நீக்கப்பட்ட ஜெயசூர்யா இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியில் ஆடுகிறார். டெண்டுல்கர் தலைமையில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியில் அவர் இடம்பெற்றுள்ளார்.
ஐ.பி.எல். போட்டியில் டெண்டுல்கருடன் தொடக்க வீரராக ஆட ஜெயசூர்யா விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது;
ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். மும்பை இந்தியன்ஸ் அணி சம்பியன் பட்டம் பெற எனது ஆட்டம் உதவியாக இருக்க வேண்டும். டெண்டுல்கருடன் தொடக்க வீரராக ஆட விரும்புகிறேன்.
அவருடன் தொடக்க வீரராக விளையாடுவது மகிழ்ச்சியானது. அவர் உலகின் தலைசிறந்த வீரர் ஆவார். அவுஸ்திரேலியாவில் உள்ள ஹேபார்ட் நகரில் ஒரு நாள் போட்டி நடந்தபோது டெண்டுல்கர் என்னை சந்தித்து ஐ.பி.எல். போட்டி குறித்து விவாதித்தார்.
எனது நாட்டுக்காக எப்போதுமே விளையாடுவதை விரும்புகிறேன். ஆனால், ஐ.பி.எல். போட்டி வித்தியாசமானது. அனைத்து அணிகளிலும் பல்வேறு நாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளளனர்.
மும்பை அணி பலமானது. பொலக், உத்தப்பா, பொஸ்மேன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். எனது நாட்டைச் சேர்ந்த சங்ககார, ஜெயவர்தன, மலிங்க, முரளிதரன் ஆகியோருக்கு எதிராக விளையாடுவது பரபரப்பானது.