எதிர் வரும் 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டியை நடத்த வாய்ப்பு இருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் ஜாக்ஸ் ரோகி தெரிவித்துள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகின் `விளையாட்டு திருவிழாவான' ஒலிம்பிக் போட்டி நடக்கும். இதன்படி எதிர் வரும் ஆகஸ்ட் 8 ஆம் திகதி சீனத் தலைநகர் பீஜிங்கில் 29 ஆவது ஒலிம்பிக் போட்டி தொடங்குகிறது. அடுத்த ஒலிம்பிக் போட்டி 2012 இல் லண்டனில் நடக்க உள்ளது. 2016 இல் போட்டிகள் அமெரிக்காவில் நடக்க வாய்ப்பு உள்ளது.இதற்கு அடுத்து 2020 இல் ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா உரிமை கோரவுள்ளது. இதற்காக இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
எதிர்வரும் 2010 இல் டில்லியில் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடக்க உள்ளது. இப்போட்டிக்கு பிறகு 2020, ஒலிம்பிக் போட்டிக்கான நடவடிக்கைகள் தொடங்கும். எந்த நாட்டுக்கு வாய்ப்பு என்பது தொடர்பான வாக்கெடுப்பு வரும் 2013 இல் நடக்கும்.
இந்நிலையில் பீஜிங்கில் வியாழக்கிழமை தொடங்கிய ஒலிம்பிக் செயற்குழுக் கூட்டத்துக்கு பிறகு பேட்டி அளித்த ஜாக்ஸ் ரோகி, இந்தியாவுக்கு பிரகாசமான வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார். இது குறித்து இவர் கூறுகையில், "ஒலிம்பிக் வாய்ப்புப் பெறுவது மிகவும் கடினமான காரியம். ஆனாலும் போட்டியை நடத்த தேவையான வசதிகள் இந்தியாவில் உள்ளது. இது பற்றி இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடி என்னிடம் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தினார். 2020 இல் ஒலிம்பிக்கை நடத்துவது அவரது கனவாக உள்ளன. இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது. தகுதி வாய்ந்த நாடு உரிமை கோருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது," என்றார்.