அமேலியா ஐலண்டில் நடைபெற்ற உலக மகளிர் சங்க களிமண் தரை டெனிஸ் போட்டியில் மகுடம் சூடி சிறப்பு பெற்றுள்ளார் ரஷ்யாவின் மரியா ஷரபோவா.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஸ்லோவாக்கியா வீராங்கனை டோமினிகா சிபுல்கோவாவை 7-6 (9-7), 6-3 என்ற நேர் செட்களில் தோற்கடித்தார் ஷரபோவா.
களிமண் தரையில் ஷரபோவா கைப்பற்றும் முதல் பட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் 3 முறை களிமண் தரையில் விளையாடியுள்ளார். ஆனால், ஒன்றிலும் வெற்றிபெறவில்லை.
உலகத் தரவரிசையில் 34 ஆவது இடத்தில் உள்ள சிபுல்கோவா, ஷரபோவாவுடன் விளையாடியது இதுவே முதல்முறை.
அரையிறுதி ஆட்டத்தில் ஷரபோவாவை எதிர்த்து விளையாடவிருந்த அமெரிக்காவின் லின்ட்சே டேவன்போர்ட், உடல்நலமில்லாத காரணத்தால் திடீரென விலகிக்கொண்டார். இதனால், ஷரபோவாவுக்கு அதிர்ஷ்டம் அடித்தது.
31 வயது டேவன்போர்ட், 2004 ஆம் ஆண்டிலிருந்து இப்போட்டியில் தொடர்ந்து பட்டங்களை வென்று வந்துள்ளார். திடீரென அவர் விலகியது அமைப்பாளர்களுக்கு ஏமாற்றத்தையளித்தது. அவரே இம்முறையும் பட்டம் வெல்ல அதிக வாய்ப்பிருந்தது.
சிபுல்கோவா, தனது அரையிறுதி ஆட்டத்தில் 6-2, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் அலைஸ் கார்னெட்டை தோற்கடித்தார்.
அன்னா சாக்வதத்சே, அமேலி மௌரெஸ்மோ, விக்டோரியா அசாரென்ரெகா ஆகியோரைத் தோற்கடித்து அவர் முன்னேறியது குறிப்பிடத்தக்கது.