2007 டிசம்பரில் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் போது (ஆள்மாறாட்டம் செய்த) உண்மையான பரீட்சார்த்திகளுக்குப் பதிலாக பரீட்சை எழுதிய விவகாரத்தில் 20 பேர் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் அவர்களுக்கு ஐந்து வருடங்களுக்கு எந்தவொரு பரீட்சையிலும் தோற்ற முடியாத விதத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. உண்மையான பரீட்சார்த்திகள் பத்து பேரும் அவர்களுக்குப் பதிலாக பரீட்சை எழுதிய பத்துப் பேருமே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் முதற் தடவையாக பரீட்சைகள் ஆணையாளர் இத்தகைய கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளார். இந்த நடவடிக்கையானது தவறென எவராலும் கூறமுடியாது.
பரீட்சைக்குத் தோற்றும் ஒரு பரீட்சார்த்திக்குப் பதிலாக பிறிதொருவர் பரீட்சை எழுதுவதும் பரீட்சார்த்தி அவ்வாறு எழுத இடமளிப்பதும் ஒரேவிதமான மோசடிக் குற்றச்செயலாகும். இன்னொரு விதமாகக் கூறுவதானால் இதை திருட்டுத்தனமான செயலெனக் கொள்ளவும் முடியும். இந்த மோசடிக் குற்றச் செயலோடு தொடர்புபட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடும் தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், இளம் வயதைக் கருத்தில் கொண்டு அவ்வாறு சட்டத்தின் பிடியில் மாட்டிவிடாமல் எதிர்காலம் பாதிக்கப்படாத விதத்தில் பரீட்சை ஆணையாளர் ஓரளவுக்கு இலகுவான தண்டனையை வழங்கியிருக்கின்றார் என்றே நாம் எண்ணுகின்றோம்.
இவ்வாறு மோசடியாக பரீட்சை எழுதி சித்தியடையும் பட்சத்தில் அந்த உண்மையான பரீட்சார்த்தியின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியான நிலைக்குத் தள்ளப்படலாம். அவரது அறிவுக்கூர்மை மழுங்கடிக்கப்பட்டு அவரால் சமூகத்துக்கே பயனற்றுப்போனவராகத்தான் அவர் காணப்படுவார். வெறுமனே சித்தியடைந்த சான்றிதழ் கடதாசியால் அவரது புத்திக்கூர்மையடையப்போவதில்லை. அது அந்த நபர் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதற்குச் சமமானதொன்றாகும். ஆரம்பத்தில் தவறிழைப்பதால் ஏற்படக்கூடிய தாக்கத்திலிருந்து அவர் மீட்சி பெறுவதற்கு அடுத்தடுத்து மோசடிகளிலீடுபட வேண்டிய அவசியம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது போகலாம்.
எதிர்காலத்தில் இதுபோன்று மோசடியாக பரீட்சை எழுதுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படாதிருப்பதற்கு இந்த தண்டனை வழிவகுக்க முடியும். மற்றொருவரின் புத்தியைக் கொண்டு பரீட்சை எழுதப்பட்டு அந்த அதிர்ஷ்டம் காரணமாக அவர் சித்தியடைந்து சான்றிதழைப் பெற்றுக்கொண்ட பின்னர், அத்தராதரத்துக்கு ஏற்ப பொறுப்பு ஒப்படைக்கப்படும்போது அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அந்தப் பொறுப்பை சரிவர நிறைவேற்ற முடியாமல் தடுமாறும் போது பாதிக்கப்படுவது அவர் மட்டுமல்ல, சமூகமும் தான். இத்தகைய மோசடி மூலம் அவர் தனக்குத்தானே சாபத்தைத் தேடிக் கொண்டவராகிறார்.
20 பேருக்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்தத் தண்டனை மூலம் எதிர்காலத்தில் மோசடியாக பரீட்சையொன்றை எழுத முயற்சிப்போருக்கு ஒரு பாடமாகக் கூட அமையலாம். இது வரைகாலமும் பணம், பொருள் மோசடிகளே நாட்டில் மேலோங்கிக் காணப்பட்டன. இப்போது பெறுமதி வாய்ந்த, மதிப்புக்குரிய கல்வியையும் மோசடி செய்யவும் கொள்ளையடிக்கவும் மேற்கொள்ளப்படுகின்ற மட்டரகமான, கைங்கரியம் இனிஒருபோதும் இடம்பெற சந்தர்ப்பமளிக்கப்படவே கூடாது.
எதிர்காலத்தில் இதுபோன்ற மோசடிகள் இடம்பெறுவதை தடுப்பதற்கான கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்தி தண்டிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றோம். குற்றச் செயல்கள் தொடர்பில் நீதிமன்றத்தினால் வழங்கப்படக்கூடிய தண்டனைகள் பற்றி ஒவ்வொருவரும் அறிந்தே வைத்திருக்கின்றனர். அதுபோன்று எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற கல்வித்துறை மோசடிகளை தடுப்பதற்கான கடும் சட்டங்களை வகுத்து அமுலுக்குக் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முன்னுதாரணமாக இம்முறை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இத்தண்டனையை அறிமுகப்படுத்தினாலும் எதிர்காலத்தில் இச்சட்டத்தினை அமுல்படுத்தி நீதிமன்றத்தினூடாகவே தண்டிப்பதற்கான வழிவகை செய்யப்பட வேண்டும்.