* சர்வதேச மன்னிப்புச் சபை
சீனாவில் கடந்த வருடம் 470 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்ற போதும் இத்தொகை 8000 ஆக இருக்கலாமென தாம் கருதுவதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவிக்கின்றது.
அங்கு இரகசியமாக நிறைவேற்றப்படும் மரண தண்டனைகளின் வீதம் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்துள்ள இச் சபை இரகசியமாக மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கைகளுக்கான திரையை சீனா தளர்த்த வேண்டுமென கோரியுள்ளது.
கடந்த வருடத்தில் 24 நாடுகளில் 1252 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், 2006 உடன் ஒப்பிடுகையில் இத் தொகை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீனா, ஈரான், சவூதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே 88 வீதமான மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுவதாக மன்னிப்புச்சபை தெரிவிக்கிறது.
சர்வதேச மன்னிப்புச் சபையினால் மரண தண்டனை தொடர்பில் விடுக்கப்பட்ட வருடாந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
கடந்த வருடம் ஏனைய நாடுகளைவிட சீனாவிலேயே அதிகளவில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், அது வெளிப்படுத்தியுள்ள தொகையைக் காட்டிலும் உண்மையான தொகை பல ஆயிரங்களாக இருக்கும். இரகசியமான முறையில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுவதை சீனா நிறுத்த வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகிலேயே அதிகளவான மரண தண்டனைகளை நிறைவேற்றுவதால் மரண தண்டனைக்கான தங்கப் பதக்கத்தை சீனா பெறுவதாக தெரிவித்துள்ள மன்னிப்புச் சபையின் பிரிட்டிஷ் பணிப்பாளர் கேற் அலன் நம்பகத்தகுந்த மதிப்பீட்டு தகவல்களின்படி நாளாந்தம் 22 கைதிகளுக்கு சீனா தண்டனையை நிறைவேற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.
சீனாவில் 60 இற்கும் அதிகமான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுவதுடன் இவற்றில் பெரும்பாலானவை துப்பாக்கியினால் சுடப்பட்டே நிறைவேற்றப்படுகிறது.
சீனாவுக்கு அடுத்தடுத்த இடங்களில் ஈரான், சவூதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகியன உள்ளமை குறிப்பிடத்தக்கது.