உலகம் வெப்பமயமாவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க அமெரிக்கா மறுத்துள்ளது.
உலகம் வெப்பமயமாவதைத் தடுக்க வேண்டுமானால் வளியை மாசுபடுத்தும் புகையை வெளியிடும் தொழிற்சாலைகளை மூட வேண்டும். இதற்கு அமெரிக்கா சம்மதிக்க மறுக்கிறது. அப்படி அந்த தொழிற்சாலைகளை மூடினால் அவை எல்லாம் இந்தியா மற்றும் சீனாவுக்கு போய்விடும் என்று அமெரிக்கா அஞ்சுகிறது.
உலகம் வெப்பமயமாகி வருவது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தொழிற்சாலைகள் வெளிப்படுத்தும் நச்சுப் புகையும், வாகனங்கள் மற்றும் குளிர் சாதனப் பெட்டிகள் வெளிப்படுத்தும் கரியமில வாயுவும் தான் உலகம் வெப்பமயமாகி வருவதற்கு முக்கிய காரணம் ஆகும். இதை கட்டுப்படுத்தாவிட்டால் பனிமலைகள் உருகி, கடல் மட்டம் உயர்ந்து விடும். அப்படி நடக்குமானால் இயற்கைச் சீற்றங்கள் கட்டுமீறி போய்விடும். மழை பெருகும். வெயில் கொளுத்தும்.
இயற்கை நிலை குலைவதைத் தடுக்க வேண்டுமானால் நச்சுப்புகையை வெளியிடும் தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும். இதற்காக ஒரு ஒப்பந்தம் வளர்ந்த நாடுகளுக்கு இடையே கையெழுத்தானது. இதற்கு கியோட்டா ஒப்பந்தம் என்று பெயர். ஜப்பானில் உள்ள கியோட்டா நகரில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் இதற்கு இந்த பெயர் சூட்டப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்த அமெரிக்கா மறுக்கிறது. இது பற்றி வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டானா பெரினோ நிருபர்களிடம் கூறியதாவது;
"உலகம் வெப்பமயமாவதைத் தடுப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக வளர்ந்த நாடுகளுக்கு இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் வளரும் நாடுகள் சேர்த்துக் கொள்ளப்படாதது எங்களுக்கு கவலையளிக்கிறது.
புகை வெளியேறுவதை தடுக்க புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட வேண்டும். அது இல்லாமல் புகைகளை வெளியிடும் தொழிற்சாலைகளை மூட உத்தரவிட்டால் அந்த தொழில் அதிபர்கள் இந்தியாவுக்கோ அல்லது சீனாவுக்கோ போய் அதே தொழிற்சாலைகளை நடத்துவார்கள். அந்த நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் அவற்றுக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் கிடையாது.
எனவே, இந்த ஒப்பந்தத்தில் வளர்ந்து வரும் நாடுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அல்லது புகை வெளியிடுவதைத் தடுக்க புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட வேண்டும். அதுவரை நாங்கள் எந்த நடவடிக்கையையும் அவசரப்பட்டு எடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.