* பொலிஸ்மா அதிபர் விக்டர் பெரேரா
எம்.ஏ.எம். நிலாம்
ஜே.வி.பி.யின் தாளத்துக்கு ஆட பொலிஸ் திணைக்களம் தயாராக இல்லை எனத் தெரிவித்திருக்கும் பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா சட்ட வரம்புகளுக்கமையவே பொலிஸார் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜே.வி.பி.யினர் சொல்லும் போது ஒருவரை கைது செய்யவும், விடுவிப்பதற்கும் சட்டம் கிடையாது எனவும் பொலிஸ் மாஅதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்ற வளாகத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினரின் வாகனம் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே பொலிஸ்மாஅதிபர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர்களான பியசிறி விஜேயநாயக்க, அச்சல ஜாகொட ஆகியோரின் முறைப்பாட்டைத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையின் போதே கடத்தப்பட்ட வாகனமும் சந்தேக நபரான பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த வீரசேகர கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இப்போது முறைப்பாடு செய்தவர்களே சந்தேக நபரை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்கள் சட்டத்துடன் விளையாடுகிறார்களா? அல்லது நீதித்துறையை கேலிக்கூத்தாக்கிப் பார்க்கின்றனரா? எனக் கேட்க விரும்புகின்றோம்.
இச்சம்பவம் காணித்தகராறு போன்றதல்ல. வாகனக் கொள்ளையாகவும், தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவுமுள்ளது. நீதிமன்றச்சட்டத்தை பொலிஸார் தம் கைகளுக்கு எடுக்க முடியாது. சட்டத்தை நினைத்தபடி பாவிக்க முடியாது. ஜயந்த விஜேசேகரவை விடுவிக்கும் கோரிக்கையை முற்றாக நிராகரிக்கின்றோம்.
சிலாபம், வெலிகம பொலிஸ் அறிக்கைகளின் படி மேலும் 22 பேரை சந்தேகத்தின் மீது கைது செய்து விசாரணைக்குட்படுத்த வேண்டியுள்ளது. மேற்படி சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் பூரண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு முழு அளவிலான அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படுமெனவும் பொலிஸ் மாஅதிபர் விக்டர் பெரேரா தெரிவித்துள்ளார்.