* பிரிடோ நிறுவனம்
"தொண்டர்களாகப் பணியாற்றிய 402 பெருந்தோட்டப் பகுதி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளன. இந்த ஆசிரிய நியமனமானது மலையக கல்வி வரலாற்றிலேயே ஒரு முக்கியமான நிகழ்வாகும்". இவ்வாறு பிரிடோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த 420 ஆசிரியர் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையிட்டு விடுத்துள்ள அறிக்கையிலேயே அது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
மலையக கல்வி வரலாற்றில் 402 ஆசிரியர்கள் நியமனம் ஒரு முக்கியமான திருப்புமுனையாகும். 1982, 1983 ஆம் ஆண்டுகள் தமிழ் மக்களுடைய வாழ்க்கையில் பெரும் பாதிப்பையும் ஏற்படுத்திய ஆண்டுகள் ஆகும். இந்த கால கட்டத்திலேயே மிகக் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருந்த மலையக கல்விக்கு அர்ப்பணிப்போடு சேவையாற்றிய தொண்டர் ஆசிரியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என போராட்டம் நடத்தினார்கள். மலையக கல்வி வரலாற்றில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த இப்போராட்டத்திற்கு மலையக அரசியல்வாதிகள் தலைவர்களிடம் இருந்து ஓரளவு ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைத்தாலும் அது பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை. எனினும், இத்தொண்டர்கள் நடத்திய பல்வேறு கவனஈர்ப்புப் போராட்டங்கள் காரணமாக இறுதியில் இவர்களுக்கு நியமனம் வழங்க அரசு உடன்பட்டது. தமிழ் மக்களுக்கு எதிராகவும் விசேடமாக மலையக மக்களுக்கு எதிராகவும் கடுமையான இனவாதம் நிலவிய காலத்திலேயே இத்தொண்டர் ஆசிரியர்கள் பணியாற்றினர்.
ஆசிரியர்கள் சார்பில் இப்போராட்டம் நடத்தப்பட்டதால் இவ்வாசிரியர்களின் நியமனமும் 402 ஆசிரியர் நியமனம் என்ற பெயரைப் பெற்றுவிட்டது. இதன் மூலமாக நியமனம் பெற்ற பல ஆசிரியர்கள் இன்று அதிபர்களாகவும் ஆசிரிய ஆலோசகர்களாகவும் மேலும் சிலர் உதவிக் கல்விப் பணிப்பாளர்களாகவும் சேவையாற்றுகின்றனர். கடுமையான போராட்டத்தின் பின்னர் இவ்வாசிரியர் நியமனம் பெறப்பட்டதால் அவர்கள் சமூகப்பிடிப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு மலையக கல்வி வளர்ச்சியில் பெரும் பங்காற்றி உள்ளனர் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. இப்பின்னணியில் இந்த 402 ஆசிரியர்களின் போராட்டத்தையும் அவர்களுடைய பணியையும் இக்காலகட்டத்தில் நினைவுபடுத்தல் மலையக சமூகத்தின் கடமையும் பொறுப்புமாகும்.
இதேவேளை, ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை கொண்டாடப்படவுள்ள உலக கல்விப் பிரசார வாரத்தின் தொனிப்பொருள் "அனைவருக்கும் தரமான கல்வி- சிறுவர்கள் கல்வியிலிருந்து வெளியேற்றப்படுவதைத் தடுப்போம்" என்பதாகும். கடந்த 25 ஆண்டுகளாக இவ்வாசிரியர்களின் பணி பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் கல்வியிலிருந்து வெளியேற்றப்படுவதை தடுத்திருப்பதால் இப்பிரசார வாரத்தில் அவர்களின் பணியை நினைவுகூர்வது பொருத்தமானதாகும். விசேடமாக இந்நிகழ்வின் முக்கியத்துவம் புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கும் மாணவர் சமூகத்திற்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
தற்போதும் கல்வித்துறையில் மற்ற சமூகங்களைவிட பின்தங்கியுள்ள மலையக சமூகம் கல்வித்துறையில் முன்னேறுவதற்கு எவ்வளவு சிக்கலான பாதையை கடந்து வந்துள்ளது என்பதையும் எத்தனை சிரமத்துடன் ஆமை வேகத்தில் முன்னேறி இந்த நிலையை அடைந்திருக்கிறது என்பதையும் மலையக சமூகத்தைச் சார்ந்த அனைவரும் தெரிந்துகொள்வது மட்டுமல்லாமல் இவ்வாசிரியர்களுக்கு தமது நன்றியையும் கௌரவத்தையும் தெரிவிப்பது அவசியமாகும். இவ்விடயத்தை பாடசாலைகள், ஆலயங்கள் மற்றும் பொதுநிகழ்வுகளில் மாணவருக்கும் மக்களுக்கும் நினைவுபடுத்த வேண்டிய பொறுப்பினை ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி அதிகாரிகள், சமயத் தலைவர்கள், அரசியல்வாதிகள் என்போர் ஒரு சமூக கடமையாக ஏற்று நிறைவேற்றுதல் அவசியமாகும். பல சிரமங்களுக்கு மத்தியில் முன்னேறுவதற்கு கடுமையாக முயற்சி செய்துகொண்டிருக்கும் ஒரு சமூகம் தனது கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து அர்ப்பணிப்போடு சேவையாற்றியவர்களை நினைவுகூர்ந்து ஊக்குவிப்பது அச்சமூகத்தின் ஆரோக்கியமான மனப்பாங்கு ரீதியான வளர்ச்சியாக கருதப்படும் என்று பிரிடோ நிறுவனம் இவ்வாசிரியர்களின் சேவையைப் பாராட்டி கௌரவித்துள்ளது.