எம்.ஏ.எம்.நிலாம்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவிருப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் எம்.ரி. ஹஸன் அலி தெரிவித்தார்.
அதற்கு முன்னோடியாக தற்போது கிராமிய மட்டத்திலான சிறிய கூட்டங்களும் மக்கள் சந்திப்புகளும் இடம்பெற்று வருகின்றன.
இம்மாதம் 30 ஆம் திகதிக்குள் மூன்று மாவட்டங்களிலும் சுமார் 500 மக்கள் சந்திப்புகளையும் சிறிய கூட்டங்களையும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒத்துழைப்புடன் நடத்த முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது திருகோணமலை மாவட்டத்தில் சிறிய கூட்டங்களையும் மக்கள் சந்திப்புகளையும் நடத்தி வரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை முதல் 30 ஆம் திகதி வரை அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பிரதான பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொள்ளவிருக்கின்றார்.
இதேவேளை எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அம்பாறை மாவட்டத்திலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் முக்கிய பிரசாரக் கூட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டு உரையாற்றவிருப்பதாகவும் திருகோணமலைக்கு ரணில் செல்லும் திகதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லையெனவும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக வட்டாரம் தெரிவித்தது.
21 ஆம் திகதி முதல் மூன்று மாவட்டங்களிலும் நடக்கும் பிரசாரக் கூட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிடும் சகல வேட்பாளர்களையும் ஆதரித்து ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின் உயர் மட்டத்தினரும் பிரசார நடவடிக்கைகளிலீடுபடுவர்.