எம்.ஏ.எம். நிலாம்
பாலஸ்தீன ஜனாதிபதி முஹம்மத் அப்பாஸ் மிக விரைவில் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்வாரென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. பிரதமர் அலுவலகத்தில் நேற்று புதன் கிழமை இடம் பெற்ற முக்கிய சந்திப்பொன்றின் போது இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் இரட்ணசிறிவிக்கிரம நாயக்காவுக்கும் கொழும்பிலுள்ள பாலஸ்தீனத் தூதுவர் அன்வர். எம்.அல் அகாவுக்குமிடையில் இடம் பெற்ற சந்திப்பின் போது பிரதமரின் பாலஸ்தீன விஜயத்தின் போது விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று பாலஸ்தீன ஜனாதிபதி இலங்கை வருவதற்கு விருப்பத்தை வெளியிட்டிருப்பதாகவும் இந்த விஜயத்துக்கான காலநேரம் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் ஆனால் இவ்வருட இறுதிக்குள் இந்த விஜயம் மேற்கொள்ளப்படலாமெனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தில் முதலீடு செய்வது தொடர்பில் முதலீட்டாளர்களின் சர்வதேச மாநாடொன்று எதிர்வரும் மே மாதம் 21, 22, ஆம் திகதிகளில் பெத்தலகேம் நகரில் நடைபெறவிருக்கின்றது. இந்த சர்வதேச முதலீட்டாளர் மகாநாட்டில் இலங்கை முதலீட்டாளர்களையும் பங்கேற்க செய்வது தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
உலக வங்கியின் ஒத்துழைப்புடன் நடைபெறவிருக்கும் இந்த மாகாட்டில் பல்வேறு உலகநாடுகளிலுமிருந்து மூவாயிரம் முதலீட்டாளர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
இந்த மாநாட்டில் இலங்கை முதலீட்டாளர் சபை, இலங்கை ஏற்றுமதியாளர் சங்கம் உட்பட முதலீட்டு வர்த்தகத் துறைசார்ந்தோரை பங்குகொள்ளச் செய்ய ஆலோசனை வழங்குவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.