குடும்பஸ்தரான வர்த்தகர் ஒருவர் நேற்றுக் காலை(16/4) வெள்ளை வானில் வந்த சிலரால் அழைத்துச் செல்லப்பட்ட பின் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தவர்கள் புகார் செய்துள்ளனர்.
கொட்டாஞ்சேனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட குறித்த நபர் இராணுவ சீருடையணிந்த மூன்று பேராலும், சிவிலில் வந்த வேறு இருவராலும் நேற்று காலை 6 மணியளவில் வெள்ளை வானில் அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக வாழ்க்கைத் தொழில் தொழிநுட்ப பயிற்சி பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஸ்ணனிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.
கொட்டாஞ்சேனையில் சப்பாத்து வீதி இல.87ல் வசித்து வந்த வர்த்தகரான கோவிந்தசாமி நாகநாதன் (57 வயது) என்பரே வெள்ளைவானில் அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக மனைவியான நாகநாதன் சரோஜனி கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திலும் பிரதி அமைச்சரிடமும் புகார் செய்துள்ளார்.
வெள்ளைவானில் வந்த இராணுவ சீருடைஅணிந்த மூவர் அடையாள அட்டைகளை பரிசோதிக்க வேண்டும் என்று கதவை தட்டித் திறந்ததாகவும் பின்னர் வீட்டுக்குள் நித்திரையாயிருந்த நாகநாதனை விசாரணைக்கு என்று அழைத்து சென்று வெள்ளை வானில் ஏற்றிச் சென்றதாகவும் சரோஜனி மேலும் தெரிவித்தார்.
தனது கணவர் இருதய நோயுள்ளவர் என்றும் எதுவிதமான குற்றச் செயல்களிலும் ஈடுபடாதவர் என்றும் அவரை அழைத்து சென்றது யார் என்று அறிய முடியாமல் இருப்பதாகவும் பல பொலிஸ் நிலையங்களில் விசாரித்த போதும் தகவல் பெறமுடியவில்லை என்றும் பிரதி அமைச்சரிடம் அவர் தெரிவித்துள்ளார்.
தனது கணவரை கைது செய்ததற்கான காரணம் புரியவில்லை என்றும் அவரை வைத்திருக்கும் இடத்தை அறிந்து விடுதலை செய்வதற்கு உதவிபுரியுமாறு பிரதி அமைச்சரிடம் அவர் கேட்டுள்ளார்.