"போர் மேகங்கள் சூழ்ந்து ஏக்கத்துடன் வாழ்கின்ற நிலையில் மக்கள் ஆன்மீக விசுவாச உறுதியுடன் வாழவேண்டும். மடுமாதா இன்று அகதியாகி விட்டாள். ஆனால், இந்நிலை நீடிக்கப் போவதில்லை. நிச்சயம் அன்னை தனது இருப்பிடத்துக்கு வந்து அருள்பாலிப்பாள் என்ற நம்பிக்கையுடன் செயற்படுவோம்"இவ்வாறு வண.பிதா யோகேஸ்வரன் தெரிவித்தார்.
அங்கிலிக்கன் திருச்சபையின் திருமலை புனித நிக்கலஸ் தேவாலய வைரவிழா நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை பிற்பகல் மேற்படி ஆலயத்தில் நடைபெற்ற இவ்விழாவில் இந்து,பௌத்த, இஸ்லாமிய மதத்தலைவர்கள், ரோமன் கத்தோலிக்க, மெதடிஸ்த மதகுருமார்களும் பங்குபற்றி ஆசியுரை நிகழ்த்தினர். நிகழ்வின் ஆரம்பத்தில் திருகோணமலை நீதிமன்ற வீதிச் சந்தியிலிருந்து அதிதிகள், மதகுருமார்கள் விசுவாசிகள் ஊர்வலமாக ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
பிரதம அதிதியாக அங்கிலிக்கன் திருச்சபையின் நுவரெலியா குரு முதல்வர் வண.பிதா தில்றோய் ரஞ்சித் கனகசபை பங்குபற்றினார். கிழக்கு மாகாணக் கல்விச் செயலாளர் இ.தியாகலிங்கம், பிராந்திய சுகாதாரசேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் இ.ஜி.ஞானகுணாளன், மிகுந்துபுர பௌத்த விகாரை அதிபதி மகிந்த வங்ஸதேரர், உவர்மலை துர்க்கை அம்மன் ஆலய பிரதம குரு ஷ்ரீதரன் குருக்கள், மௌலவி ஹதிபத்துல்லா ஆகியோரும் நிகழ்வில் பங்குபற்றினர்.
பௌத்த மதகுரு மகிந்த வங்ஸதேரர் ஆசியுரையில், அனைத்து மதங்களும் அன்பு, கருணை ஆகியவற்றையே போதிக்கின்றன. புரிந்துணர்வுடன் மதங்கள் செயற்படவேண்டும். அது நிரந்தர அமைதிக்கு வழிசமைக்கும் என்றார். அனைத்து இன,மதங்களைச் சார்ந்த பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் பணியில் ஈடுபடும் திருமலை புனித நிக்கலஸ் தேவாலயம் கடல்கோள் அனர்த்தத்தின்போது ஆற்றிய பணியை மௌலவி ஹதியத்துல்லா தனது ஆசியுரையில் நினைவு கூர்ந்தார். இஸ்லாத்தில் சலாம், சிங்களத்தில் சாம, தமிழில் சாந்தி ஆகிய வார்த்தைகள் எல்லாம் சமாதானத்தையே வலியுறுத்துகின்றன. இதனை அனைத்துத் தரப்பினரும் மனதிற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். துர்க்கையம்மன் ஆலயக் குருக்கள் பேசும்போது; இறைவன் வேற்றுமை, பேதம் காட்டுவதை எந்தச் சமயமும் போதிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
நுவரெலியா குருமுதல்வர் அருட்தந்தை தில்றோய் கனகசபை பேசும்போது; "உங்கள் யாத்திரையில் உங்களோடு பயணித்த கடவுள் தொடர்ந்தும் நீங்கள் உண்மைக்காக, நீதிக்காக, நியாயத்துக்காக எழுந்து நிற்பதற்கும் உயிர்வாழும் கிறிஸ்துவோடு புதுப்பிக்கப்பட்ட அனுபவத்தைப் பெற்றுக் கொண்டு தொடர்ந்து பணிசெய்ய உங்களை ஆயத்தப்படுத்துவாராக" என்று குறிப்பிட்டார். பிரதேச குருவானவர் சந்திரன் கிறிஸ்பஸ் வைரவிழாவின் முதலாவது பிரதியை ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஹெரல்ட் சிறிதரனுக்கு வழங்கி வெளியிட்டு வைத்தார். தமிழ், சிங்கள கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. மகளிர் சங்கத்தின் குழுவினரால் புனித நிக்கலஸ் தேவாலய வரலாறு பற்றிய வில்லுப்பாட்டுக் கச்சேரி நடத்தப்பட்டது. நிகழ்வின் ஆரம்பத்தில் நுவரெலியா குரு முதல்வர் வண. பிதா தியோரிஸ் ரஞ்சித் கனகசபை, ஆலயவளவில் முதியோருக்கான பொழுதுபோக்கு அறையைத் திறந்து வைத்து ஆசிர்வதித்தார்.