* நளினியின் சட்டத்தரணி கருத்து
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையை விடுதலைப் புலிகளின் பெயரில் வேறு யாராவது செய்திருக்கலாமோ என்ற சந்கேம் பிரியங்கா காந்திக்கு ஏற்பட்டிருப்பதாக ராஜீவ் கொலைக் குற்றவாளியான நளினியின் சட்டத்தரணி துரைசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்; நளினியை சந்தித்த பிரியங்கா காந்தி நளினியிடம் ராஜீவ் காந்தியை கொல்ல உத்தரவிட்டது யார் ? விடுதலை புலிகளா அல்லது வேறுயாராவதா? என்ற கேள்விகளைக் கேட்டுள்ளார். இந்தக் கேள்விகளைப் பார்க்கும் போது, விடுதலைப் புலிகள் இந்தப் படுகொலையை செய்திருப்பார்களா என்ற சந்தேகத்தில் பிரியங்கா காந்தி இருப்பது உறுதியாகிறது.
வேறு சில சக்திகள் விடுதலைப் புலிகளின் பெயரில் இந்தப் படுகொலையை செய்திருக்கலாமோ என்று பிரியங்கா காந்தி சந்தேகப்படுகிறார்.
ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகள் கடந்து விட்டநிலையில் நளினி உள்ளிட்டோருக்கு தண்டனைகள் உறுதிசெய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் யார் கொலை செய்யச் சொன்னது? ஏன் கொலை செய்யப்பட்டார்? என்று பிரியங்கா காந்தி கேட்பது மிகவும் கவனத்துக்குரியது. இந்தக் கேள்விகள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன.
இந்தச் சந்திப்பின் போது பாதுகாப்பு மீறப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பு வழக்கமான பார்வையாளர் அறையில் நடக்கவில்லை. சிறைக் கண்காணிப்பாளர் அறையிலேயே நடந்துள்ளது. கைதி ஒருவரை பார்வையாளர்கள் சந்திக்கும் போது சிறை அதிகாரிகள் யாராவது அருகில் இருக்க வேண்டும். ஆனால் நளினியை பிரியங்கா சந்தித்த போது எவருமே அருகில் இல்லை. இருவரும் தனியாக இருந்துள்ளனர். இதனால் இருவரினதும் உயிருக்கே ஆபத்து இருந்து இருக்கிறது. எது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம் என்றார்.
இதேவேளை பிரியங்கா காந்தி தன்னை சந்தித்தமை தொடர்பில் நளினி தனது சகோதரரான பாக்கியநாதனிடம் கூறுகையில், எனது பாவங்கள் கழுவப்பட்டுவிட்டன. என்னை பிரியங்கா காந்தி மன்னித்துவிட்ட தாகவே உணர்கிறேன். வாழ்நாள் முழுவதும் நான் அவருக்கு கடமைப்பட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.