இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகளான பிரியங்கா வத்ராவுக்கும் ராஜீவ் கொலைக்குற்றவாளிகளில் ஒருவரான நளினி ஷ்ரீகரனுக்கும் இடையில் இடம்பெற்ற சுமுகமான சந்திப்பானது இந்தியாவுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையில் மீண்டும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உதவக் கூடுமென யாழ்.மாவட்ட தமிழ் கூட்டமைப்பு எம்.பி.எஸ்.கஜேந்திரன் கூறியுள்ளார்.
நான் மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கிறேன். ஏனெனில், இந்தச் சந்திப்பானது இந்தியாவுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையில் நெருங்கிய உறவுக்கு இட்டுச்செல்லுமென கஜேந்திரன் கூறியுள்ளார்.
இந்தியாவும் இலங்கைத் தமிழர்களும் படிப்படியாக நெருங்கி வந்து கொண்டிருக்கின்றனர். இடைவெளி குறைவடைவதையே நாம் எதிர்பார்க்கிறோம். பிரியங்கா - நளினி சந்திப்பானது சரியான தருணத்தில் இடம் பெற்றுள்ளது என்று நியூ வின்ட் பிரஸ் இணையத்தளத்திற்கு கஜேந்திரன் கூறியுள்ளார்.
கடந்த காலத்தில் விரும்பமற்ற நிகழ்வுகள் இடம் பெற்றதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் கடந்த காலத்தை புதைத்து விட்டு புதிய உறவை கட்டியெழுப்பவேண்டிய நேரம் இது வென்பதை இந்திய அதிகாரிகளுக்குத் தெரிவிக்க நாம் விரும்புகிறோம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்தியா தொடர்பான தமது நிலைப்பாட்டை இலங்கையிலுள்ள ஏனைய சமூகங்கள் மாற்றிக் கொள்ளக்கூடும் என்பதுடன், தமக்கு பொருத்தமானவகையில் இந்தியாவுடன் பகைமையுணர்வையும் ஏற்படுத்திக்கொள்ளலாம். ஆனால், இந்தியாவின் தேசிய நலன்களுக்கு ஆதரவாகவே இலங்கைத் தமிழர்கள் எப்போதும் இருப்பார்களென்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் என்றும் கஜேந்திரன் கூறியுள்ளார்.
பிரியங்காவுக்கும் நளினிக்கும் இடையில் சந்திப்பு இடம் பெறுவதற்கான ஏற்பாடுகளில் விடுதலைப்புலிகளின் சம்பந்தம் இருப்பதற்கான சாத்தியத்தை கஜேந்திரன் நிராகரித்திருக்கிறார். அதேசமயம், மற்றொரு யாழ். மாவட்ட தமிழ் கூட்டமைப்பு எம்.பி.யான
சுரேஷ் பிரேமச்சந்திரன் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், இந்தச் சந்திப்பின் பின்னணியில் அரசியல் நோக்கம் எதுவும் இருப்பதாக தனக்கு தென்படவில்லையென குறிப்பிட்டுள்ளார்.
தனது தந்தையை யார் கொன்றார்களென தெரிந்து கொள்ள பிரியங்கா விரும்பியதாக கூறப்படுகிறது. அத்துடன் கொலையாளிகள் மீது அவர் ஆத்திரம் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார் என்றும் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார். அத்துடன், இச்சந்திப்பின் மூலம் இந்தியாவுக்கும் புலிகளுக்குமிடையில் மீள நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் சாத்தியம் இல்லை. புலிகள் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு தெளிவானது என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரியங்கா தனது விசனத்தை இவ்விதம் வெளிப்படுத்த விரும்பியிருக்கலாம். ஆனால், இதன் பின்னணியில் புலிகளின் கரம் இருப்பதாக நான் கருதவில்லை என்று கல்விமானான டாக்டர் ஜோன் குணரட்ண கூறியுள்ளார்.
கொலையாளியை சந்திக்க விரும்புவது அதிர்ச்சியான விடயமாகும். ஆனால் பெண்கள் வித்தியாசமானவர்கள் என்று முன்னாள் வெளிவிவகார இணைச்செயலாளரான கே.கொடகே கூறியுள்ளார்.
இந்தச்சந்திப்பானது சாதாரணமானதாக இருக்க முடியாது. இந்தியாவில் இடம் பெறவிருக்கும் தேர்தல்களுடன் தொடர்புபட்டதாக இது இருக்கலாம். தமிழ் தேசியவாதிகளின் வாக்கில் இந்திய காங்கிரஸ் கண்வைத்திருக்கலாம் என்று கூறிய `ஐலண்ட்' பத்திரிகை ஆசிரியர் பிரபாத் சகாபந்து, தமிழரின் பிரச்சினை தொடர்பாக இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் என்று நான் நினைக்கவில்லையென்றும் அது மாற்றப்படாததொன்று என்றும் தெரிவித்துள்ளார்.