வவுனியாவில் நேற்று புதன்கிழமை அதிகாலை விழிப்புக் குழுவால் கொள்ளைக் கோஷ்டியொன்று துரத்திப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வவுனியா பண்டாரிக்குளம் மற்றும் உக்கிளாங்குளம் பகுதியில் அண்மைக் காலமாக இரவு நேரக் கொள்ளை அதிகரித்துள்ளது. இதையடுத்து மேற்படி பகுதிகளில் கொள்ளையர்களை விரட்ட விழிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு இரவு நேரத்தில் அவர்கள் காவல் புரிந்து வருகின்றனர்.
இவ்வாறிவர்கள் காவல் புரிந்த போது நேற்று அதிகாலை ஒரு மணியளவில் பண்டாரிக்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளொன்றில் கொள்ளையர் மூவர் வந்த போது விழிப்புக் குழுவினர் அவர்களை விரட்டியுள்ளனர்.
அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பியோடிய கொள்ளையர்கள் உக்கிளாங்குளத்திற்குள் நுழைந்த போது அங்கு காவல் கடமையில் ஈடுபட்டிருந்த விழிப்புக் குழுவினர் இவர்களைத் துரத்தத் தொடங்கவே மோட்டார் சைக்கிளைப் போட்டு விட்டு அவர்கள் தப்பியோடியுள்ளனர்.
எனினும், விழிப்புக் குழுவினர் அவர்களைக் கலைத்துப் பிடித்து பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இவர்கள் அனைவரும் சிறிநகர் வாசிகளெனத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து இவர்களுக்குத் தகவல்களை வழங்கும் உக்கிளாங்குளத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.