கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பிரசாரப் பணிகள் முஸ்லிம் பிரதேசங்களில் சூடு பிடித்துள்ளன.
தேர்தல்கள் திணைக்களம் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்களை அறிவித்துள்ளதையடுத்தே தேர்தல் பிரசாரங்கள் மும்முர மடைந்துள்ளன.
அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்ட தமிழ்ப் பிரதேசங்களில் தேர்தல் பிரசார ஆரவாரங்கள் இல்லை. இப்பிரதேசங்களுக்கு வேட்பாளர்கள் செல்ல அஞ்சுவதுடன் மக்களும் தேர்தல் குறித்துக் கூடிய கரிசனை கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
முஸ்லிம் பிரதேசங்களில் வாக்காளர்களை தம்பக்கம் ஈர்ப்பதற்காக அரசாங்கத்தரப்பு அதிரடி வாக்குறுதிகளை தினமும் வழங்கி வருவதாகவும் புதிய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கட்சிரீதியாக கிழக்குத் தேர்தல் களத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்பன தமது பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளதுடன் சுயேச்சைக் குழுக்களை தம்பக்கம் இழுக்கும் செயற்பாட்டிலும் இறங்கியுள்ளன.
எனினும் கிழக்கில் அதிகரித்துள்ள வீதித்தடைகளும் திடீர் சோதனைச் சாவடிகளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்வதாக அமைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு ஏற்றாற்போல கிழக்கு தேர்தல் பிரசாரம் மாலை 6 மணியுடன் நிறைவுசெய்ய வேண்டுமென்ற கட்டளையும் அங்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவுவதை வலுப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.