வடக்கே செவ்வாய்க்கிழமை நள்ளிரவும் நேற்று புதன்கிழமையும் இரு இடங்களில் விமானப் படை விமானங்களும் ஹெலிகொப்டர்களும் கடும் தாக்குதலை நடத்தியுள்ளன.
நேற்றுக் காலை 6.15 மணியளவில் முகமாலை பகுதியில் எம்.ஐ.24 ரக ஹெலிகொப்டர்கள் விடுதலைப்புலிகளின் நிலைகள் மீது கடும் தாக்குதலை நடத்தியுள்ளதாக விமானப்படை பேச்சாளர் விங்கொமாண்டர் அன்றூ விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
இந்தப் பகுதியில் படை நடவடிக்கையில் ஈடுபடும் தரைப் படையினருக்கு ஆதரவாகவே விடுதலைப்புலிகளின் பதுங்கு குழிகள் மற்றும் மோட்டார்நிலைகள் மீது தாக்குதல் ஹெலிகொப்டர்கள் கடும் தாக்குதலை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேநேரம், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் ஒட்டுசுட்டான் பகுதியில் குண்டு வீச்சு விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளன.
ஒட்டுசுட்டானுக்கு வட மேற்கே 8 கிலோ மீற்றர் தூரத்தில் காட்டுப் பகுதியில் விடுதலைப்புலிகளின் நிலைகள் மீது இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் விங்கொமாண்டர் தெரிவித்தார்.
புலிகளின் இனங்காணப்பட்ட மூன்று நிலைகள் மீதே நள்ளிரவுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஒட்டுசுட்டானினும் முகமாலை பகுதியிலும் நடைபெற்ற தாக்குதல்கள் வெற்றிகரமாயிருந்ததாகவும் விமானப் படையினர் தெரிவித்துள்ளனர்.