* மத்திய வங்கி ஆளுநர் கப்ரால்
உள்நாட்டு யுத்தத்திலும் பார்க்க உணவு, எரிபொருள் விலைகள் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை அதிக அளவுக்கு பாதிப்பதாக தெரிவித்திருக்கும் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாத் கப்ரால், ஆயினும் 7 சதவீத பொருளாதார வளர்ச்சி இலக்கை எட்டுவதை இலங்கை தவறவிட்டு விடுமென்ற கருத்தை நிராகரித்திருக்கிறார்.
அதிகளவிலான வட்டி வீதமும் சர்வதேச ரீதியாக பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியும் இந்த வருடமும் அடுத்தாண்டும் இலங்கையின் பொருளாதாரத்தில் 6 சதவீதத்திற்கும் குறைவான வளர்ச்சியையே காட்டும் என்று இந்த மாத முற்பகுதியில் ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்வு கூறியிருந்தது.
ஆனால், கிழக்கை மீளக் கைப்பற்றியிருப்பதால் புதிய வளர்ச்சி ஏற்படுமெனவும் அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை திட்டமிட்ட இலக்கை அண்மித்ததாக வைத்திருக்க இக்காரணி துணை நிற்கும் எனவும் ராய்ட்டர் செய்தி சேவைக்கு கப்ரால் கூறியுள்ளார்.
பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் எண்ணெய், உணவு விலைகளின் தாக்கம் இல்லையேல் யுத்தம் இடம்பெற்றாலும் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக அதிகரித்திருக்கும் சாத்தியம் உள்ளது. எரிபொருள் உணவுப் பொருள் விலை அதிகரிப்பாலேயே பொருளாதார வளர்ச்சிக்கு யுத்தத்திலும் பார்க்க அதிக தடை ஏற்பட்டுள்ளது என்று ஆளுநர் கூறியுள்ளார்.
கிழக்கின் திறைதேசிய உற்பத்தி தற்போது 0.25 சதவீதமாக உள்ளது. அது 1 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயம், மீன்பிடித் தொழில், அனல்மின் உலை நிர்மாணம் என்பவற்றால் கிழக்கில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று அவர் கூறியிருக்கிறார்.
இலங்கையின் சராசரி பண வீக்கம் 17.7 சதவீதமாக மார்ச்சில் காணப்பட்டது. அதேசமயம் நுகர்வுப் பொருட்கள் 23.8 சதவீதத்தால் அதிகரித்துள்ளன.
எண்ணெய் விலை பரலொன்று 85.90 டொலர்களாக குறைவடைந்தால் திட்டமிட்ட இலக்கை அடைய முடியுமென கப்ரால் கூறினார். ஆனால் கடந்த செவ்வாய்க்கிழமை மசகெண்ணெய் பரலொன்று 114 டொலராக அதிகரித்திருக்கிறது.
வருடத்தில் 4 மாதங்களே முடிவடையும் நிலையில் உள்ளது. விலைவாசி குறையுமென சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர். அவ்வாறு இடம்பெற்றால் பொருளாதார வளர்ச்சி 10-11 சதவீதமாக இருக்கும். இல்லாவிடில் நிலைமை மிகவும் கடினமானதாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
உலகளாவிய ரீதியில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பானது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதென தெரிவித்திருக்கும் மத்திய வங்கி ஆளுநர் ஆயினும் இலங்கைத் தீவின் கிராமப்புற வறிய மக்கள் உணவு உற்பத்தியாளர்களாக இருப்பதால் அனுகூலமடைவர் என்று குறிப்பிட்டார்.
வட்டி வீதங்கள் மேலும் இறுக்கமாக்கப்படுமா என்பது குறித்து அவர் கருத்தெதனையும் தெரிவிக்கவில்லை. ஆனால், பண நிரம்பலின் ஊடாக ஏற்படும் பண வீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய வங்கி நடவடிக்கை எடுத்திருப்பதாக அவர் கூறினார்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மெத்தனமான போக்கையே காட்டுமென ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்வு கூறியிருப்பது அதிகளவுக்கு தகவல்களை பெற்றுக் கொள்ளாத காரணத்தினாலேயே என்றும் கப்ரால் தெரிவித்திருக்கிறார்.
கடந்த வருடம் இலங்கைக்கு 450 மில்லியன் டொலர் நேரடி முதலீடுகள் கிடைத்ததாகவும், சீனா, ஆசியா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா உட்பட பல இடங்களிலிருந்து முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஆனால், ஆசியாவில் பொருளாதார வளர்ச்சி பெற்று வரும் நாடுகளிடமிருந்தே முதலீடுகள் அதிகரித்து வருவதாகவும் மத்திய வங்கி ஆளுநர் கூறியுள்ளார்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கைகள் பற்றியோ யுத்த நிறுத்தம் முறிவடைந்தமை குறித்தோ முதலீட்டாளர்கள் கரிசனைக்கெடுப்பதாக தென்பட வில்லை. இந்த மாதிரியான மோதல்கள் தொடர்பாக கதைகள் சுற்றிச் சுழன்று வருவது தவிர்க்க முடியாததொன்றாகும். ஆனால், பொருளாதார ரீதியிலேயே முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்கின்றனர். ஏனைய சில நாடுகளைப் பார்த்தால் அந்நாடுகளில் அதிகளவிலான மனித உரிமை மீறல்கள் காணப்பட்டாலும் அந் நாடுகள் அதிகளவு முதலீடுகளை கவர்ந்திழுப்பதை காணக்கூடியதாக இருக்கிறது என்று கப்ரால் குறிப்பிட்டிருக்கிறார்.