மனித உரிமை மீறல்களை விசாரிக்க அரசுக்கு அரசியல் துணிச்சல் இல்லையென சர்வதேச நிபுணர்கள் குழு தனது இறுதி அறிக்கையில் கூறியிருந்த நிலையில் அக்குழுவின் தலைவரும் இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியுமான பி.என்.பகவதி தலைமையிலான குழு இலங்கைக்கு வருகைதரவுள்ளது.
இலங்கை வரும் இக்குழுவினர் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கொழும்பில் முக்கிய செய்தியாளர் மாநாட்டையும் நடத்தி விளக்கமளிக்கவுள்ளனர்.
கடந்த மார்ச் மாதத்திலிருந்து சர்வதேச முன்னணி நிபுணர்கள் சுயாதீனக் குழு விசாரணை ஆணைக் குழுவின் விசாரணைகளை அவதானிக்கும் பணியை உத்தியோகபூர்வமாக நிறுத்தியிருந்தது.
இந்நிலையில் நேற்று அக்குழு தனது இறுதி அறிக்கையை வெளியிட்டிருந்ததுடன், அதில் அரசையும் பாரதூரமான மனித உரிமை மீறல்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவையும் கடுமையாக சாடியிருந்தது.
குழுவின் அறிக்கை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையிலேயே கொழும்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முக்கிய செய்தியாளர் மாநாட்டை நடத்தவுள்ளது.
இதன் பொருட்டு குழுவின் தலைவர் பி.என்.பகவதி, பேராசிரியர் சேர் என்.ரொட்லி மற்றும் பேராசிரியர் வை.யோகொட்டா ஆகியோர் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.