* முரளிதரன் கூறுகிறார்
20 ஓவர் போட்டிக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. இதனால், ஒருநாள் போட்டிகள் பாதிக்கப்படலாமென்று இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் கூறியுள்ளார்.
இந்திய பிரிமியர் லீக் சார்பில், 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது. இதில் 8 நகர அணிகள் கலந்துகொண்டு மோதுகின்றன. கோடிக்கணக்கில் பணத்தை கொட்டிக்கொடுத்து பிரபலங்களால் வாங்கப்பட்டுள்ள இந்த அணிகளில் வெளிநாடு மற்றும் இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
இதன் தொடக்க ஆட்டம் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை நடக்கிறது. இதில் பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் - கொல்கத்தா நைற் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐ.பி.எல். போட்டிக்கான சென்னை `சுப்ப கிங்ஸ்' அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தினசரி காலையும், மாலையும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. சென்னை அணியில் இடம்பிடித்துள்ள இலங்கையை சேர்ந்த முன்னணி சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;
ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். குறிப்பாக இந்தியாவில் உள்ள ஆடுகளங்கள் எப்பொழுதும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். சுழற்பந்து வீச்சாளர்கள் ஒரு சமயம் ஓட்டங்களை விட்டுக் கொடுக்க நேர்ந்தாலும் விக்கெட்டுகளை சாய்ப்பார்கள். நான் இங்கிலாந்தில் உள்ள கவுண்டி அணிக்கு 7 இற்கும் மேற்பட்ட 20 ஓவர் போட்டிகளில் விளையாடியிருக்கிறேன்.
இதனால், 20 ஓவர் போட்டிக்கு ஏற்பட ஆடுவதில் பிரச்சினையிருக்காது. இந்தப் போட்டியில் ஆடும் எல்லா அணிகளுமே சிறப்பானவை தான். இதனால், எந்த அணி வெற்றிபெறுமென்று சொல்ல முடியாது. போட்டி நாளன்று எந்த அணி சிறப்பான திறனை வெளிப்படுத்துகிறதோ? அந்த அணி வெற்றிபெறும்.
சென்னை அணியின் கப்டனாக தோனி உள்ளார். அவர் மிகவும் ராசியானவர். அவரது தலைமையில் இந்திய அணி 20 ஓவர் உலகக் கிண்ணம் உட்பட பல போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. அந்த வெற்றி ராசி இந்தப் போட்டியிலும் தொடருமென்று நம்புகிறேன்.
சென்னை ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருக்கும். மழை காரணமாக தென் ஆபிரிக்கா - இந்தியா இடையேயான முதல் டெஸ்டில் சேப்பாக்கம் ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு எடுபடவில்லை. மற்றபடி வழக்கமாக இங்கு சுழற்பந்து வீச்சு நன்றாக எடுபட்டிருக்கிறது. பந்து நன்றாகவும் பவுன்சாகும். எந்தவொரு போட்டியில் ஆடினாலும் வெற்றி பெறவேண்டுமென்பது தான் எல்லா தொழில்முறை வீரர்களின் நோக்கமாகவிருக்கும்.
பல நாட்டு வீரர்கள் ஒரு அணியில் இடம்பெறுவதால் பிரச்சினையில்லை. கால்பந்தாட்டக் கிளப்புக்காகவும், நாட்டு அணிக்காகவும் வீரர்கள் ஆடுகிறார்கள். அதுபோல் தான் நாங்களும் எங்கள் நாட்டுக்கு ஆடுவது போல் தான் இந்த அணியில் ஆடும் போதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிபெற முயற்சிப்போம்.
டெஸ்ட் போட்டி தான் எப்போதும் சிகரமாகும். இந்த அவசரமான காலகட்டத்தில் ஒரு போட்டியின் 5 நாள் ஆட்டத்தையும் அதிகம் பேர் பார்ப்பது என்பது கடினமான காரியம். குறுகிய நேரத்தில் நடந்து முடியும் 20 ஓவர் போட்டிக்கு வருங்காலத்தில் நல்ல எதிர்காலம் உள்ளது. இளைஞர்களை அதிகம் கவர்ந்துள்ள இந்தப்போட்டி நல்ல பொழுதுபோக்காக உள்ளது. ஆனால், 20 ஓவர் போட்டியால் ஒருநாள் போட்டி (50 ஓவர்) பாதிக்கப்படும் அச்சமுள்ளது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.
சென்னை அணிக்காக ஆடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஏனெனில் எனது மனைவியின் ஊர் சென்னையாகும். அத்தோடு எனது மூதாதையர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். எனவே இந்த அணிக்காக ஆடுவதை கௌரவமாகக் கருதுகிறேன். 4 ஓவர்கள் தான் பந்துவீச முடியும் என்றாலும் அதற்கு தக்கபடி தயாராகி விடுவோம். துடுப்பாட்ட வீரர்களும் எங்களை போலத்தான் சூழ்நிலைக்கு ஏற்ப வேகமாக அனுசரிக்க வேண்டியுள்ளதென்றார்.