Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 18, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
உள்நாட்டு அரிசி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் தானிய விலை அதிகரிப்பை குறைக்கலாம்
[18 - April - 2008] [Font Size - A - A - A]
பைசல் சமத்

இந்தத் தீவு நாட்டில், உள்ளூரில் விளைவிக்கப்படும் முக்கிய உணவுப் பொருளான அரிசிக்கு சமமாக பயன்படுத்தப்பட்டு வந்த கோதுமை மாவின் பாவனை தற்போது பெருமளவில் வீழ்ச்சி அடைந்துள்ளமை உணவுப் பாதுகாப்பு நிபுணர்களால் பெரிதும் வரவேற்கப்படுகிறது. உலகளாவிய தானிய விலை அதிகரிப்பை முறியடிப்பதற்கு இதுவே சிறந்த வழியென அவர்கள் கூறுகின்றார்கள்.

இலங்கை மக்களின் உணவுப் பழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டு அவர்கள் அரிசியையும் பருப்பு வகைகளையும் அதிகமாக பாவனைக்கு எடுப்பது குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உட்பட பலர் பகிரங்கமாக வரவேற்புத் தெரிவித்துள்ளார்கள்.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களின் பாவனை வீழ்ச்சி அடைந்துள்ளமை குறித்துத் தாம் பெரிதும் மகிழ்ச்சி அடைவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்த மாத ஆரம்பத்தில் தேசியவாத கட்சியான இலங்கை சுதந்திரக் கட்சியின் கூட்டமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, மிகவும் செழிப்பான விவசாயக் காணிகள் எம்மிடம் இருந்த போதிலும் ஆரம்பத்தில் இலவசமாகவும் பின்னர் கடன் அடிப்படையிலும் எமக்குக் கோதுமை மாவைத் தந்து எம்மை அந்த உணவுப் பழக்கத்திற்கு அடிமையாக்கினார்கள் என்று கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று, ரோமில் தலைமை அலுவலகத்தைக் கொண்ட உணவு விவசாய ஸ்தாபனம் வெளியிட்ட பட்டியல் ஒன்றில் விலை அதிகரிப்பு காரணமாக உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கும் 14 நாடுகளில் இலங்கையும் ஒன்று என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

உணவு விவசாய ஸ்தாபனத்தின் பட்டியலில் குறிப்பிடப்பட்ட ஆசிய நாடுகளில் இலங்கை, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், தஜிகிஸ்தான், ஆர்மேனியா ஆகியனவும் ஆபிரிக்க நாடுகளில் கொஸ்டாறிக்கா, செனெகல், நைஜீரியா, சோமாலியா, சூடான், உகண்டா, எதியோப்பியா, மொசாம்பிக் ஆகியனவும் அடங்கியிருந்தன.

இலங்கை அரசாங்கம் இறக்குமதி தானியங்கள் மீதான தீர்வையை அதிகரித்துள்ளதுடன், இந்தியா, வியட்நாம் போன்ற பெரும் அரிசி ஏற்றுமதி நாடுகளிடம் இலங்கைக்கான ஏற்றுமதியை அதிகரிக்குமாறு கேட்டுள்ளது.

பெருமளவில் அரிசி உற்பத்தியில் ஈடுபடும் நாடான இந்தியா உள்நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் அரிசி ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தியதுடன், இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்றுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 100,000 தொன் அரிசியை அனுப்ப இணங்கியுள்ளது.

இலங்கையின் பொருளியல் நிபுணரும் விவசாயத் துறையில் வல்லுநருமான நிமால் சந்திரரத்ன கருத்து தெரிவிக்கையில், அரிசிப் பாவனை நாடுகளும் அரிசி உற்பத்தி நாடுகளும் வசதி கருதியும் விலை மலிவு காரணமாகவும் பல வருடங்களாக அரிசிக்குப் பதிலாக கோதுமை மாவைப் பயன்படுத்தி வந்துள்ளன என்று தெரிவிக்கிறார்.

எனவே மக்களின் ஒரு பகுதி உணவு குறைக்கப்பட்டால் அவர்களால் எப்படி உண்ண முடியும்? ஒரு வேளை உணவை அவர்கள் விட்டுவிட வேண்டும் அல்லது மாற்று உணவைத் தேடிக் கொள்ள வேண்டும் என்று சிறு அளவிலான விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்துக் கவனம் செலுத்திவரும் சரத் பெர்னாண்டோ என்பவர் தெரிவித்தார்.

அண்மைக் காலத்தில் அரிசி, கோதுமை மா ஆகியவற்றின் விலை அதிகரிப்பு, எண்ணெய் விலை அதிகரிப்பினால் மேலும் மோசமடைந்ததுடன், இதன் விளைவாக ஏனைய சகல பொருட்களின் விலைகளும் அதிகரித்ததுடன், பணவீக்கத்தையும் 20 சதவீதத்திற்கு மேலால் அதிகரிக்கச் செய்துவிட்டதென பெர்னாண்டோ மேலும் கூறினார்.

பணவீக்க அதிகரிப்புக்கு சர்வதேச எண்ணெய் விலைகளே காரணமென அரசாங்கம் கூறி வருகிறது. ஆனால் சர்வதேச நாணய சபை இந்த மாத ஆரம்பத்தில் வெளியிட்ட அறிக்கையில் உள்நாட்டு நடவடிக்கைகளும் பெரும்பாலும் தவறான முகாமைத்துவமுமே பணவீக்க அதிகரிப்புக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாண் மற்றும் கோதுமை மாவிலிருந்து தயாரிக்கப்படும் ஏனைய உணவுப் பொருட்களின் பாவனை 40 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது என்று சில உத்தியோகப் பற்றற்ற புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், அரசாங்க அதிகாரிகளால் இதனை ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை. சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் மாதாந்தம் இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெற்றிக் தொன் கோதுமை மா தற்போது 80,000 மெற்றிக் தொன்னாக குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

இறக்குமதி செலவின அதிகரிப்பு, வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை, கொடுப்பனவு மீதி வீழ்ச்சி ஆகியவற்றுடன் பலர் அன்பளிப்பு அமைப்புகளின் குறைவான சலுகைக் கடன் போன்றவை காரணமாக அரசாங்கம் கடந்த செப்டெம்பர் மாதத்தில் உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டமொன்றை ஆரம்பித்தது.

`பயிர் வளர்ப்போம் தேசத்தைக் கட்டியெழுப்புவோம்' என்ற தொனிப் பொருளில் 2007-2010 ஆண்டு காலப்பகுதியில் உள்ளூர் உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்காக ஜனாதிபதி ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கப்பட்ட தேசிய இயக்கம் உணவுப் பழக்கத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் வருடாந்தம் 100 பில்லியன் ரூபா செலவில் இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் தொகையைக் குறைக்கும் எனவும் நம்பப்படுகிறது.

கிழக்கின் தானியக் களஞ்சியம் என்று ஒருகாலத்தில் கருதப்பட்ட இலங்கை, முன்னைய அரசாங்கங்களினால் ஆரம்பிக்கப்பட்ட இதேபோன்ற திட்டங்களால் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற முடியும் என்பதைக் காண்பித்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக அண்மைக் காலத்தில் உள்ளூர் உணவு உற்பத்தியைக் கைவிட்டு இறக்குமதி உணவில் பெருமளவில் தங்கியிருந்துவிட்டோம் என்று செப்டெம்பர் மாத கூட்டத்தில் ஜனாதிபதி ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார். 1970 களில் கோதுமை மாவைக் கொள்வனவு செய்யப் பெற்ற கடன் தொகைகளை இன்னமும் நாங்கள் திருப்பிச் செலுத்தாதிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்க அரசாங்க பொதுச் சட்டம் 480 இன் கீழ் 1970களில் இலங்கை கோதுமை மாவைப் பெற்று வந்தது. இத்திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்படும் மாவுக்கு உள்ளூர் கரன்சியில் பணத்தைச் செலுத்தலாம்.

இத்திட்டத்தைப் பெருமளவில் விமர்சித்து வந்த அப்போதைய நிதியமைச்சர் என்.எம்.பெரேரா அமெரிக்கா இந்த மாதிரி இலங்கை கரன்சியை சம்பாதித்துக் கொண்டிருந்தால் இலங்கை அமெரிக்காவுக்கு பெரும் கடனாளியாகிவிடும் என்று தெரிவித்திருந்தார்.

கடந்த 5 வருடங்களாக சிங்கப்பூரில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள ஆலைக் கம்பனியான பிறிமா லிமிடெட் நிறுவனம் அவுஸ்திரேலியாவிலிருந்தும் வேறு மலிவாக கோதுமையை விற்பனை செய்யும் நாடுகளிடமிருந்தும் கோதுமையைக் கொள்வனவு செய்து இலங்கையில் நிறுவியுள்ள அதன் ஆலையில் அதனை அரைத்து இலங்கைச் சந்தைக்கு மாவாக விநியோகித்து வருகிறது. அதற்கு முன்னர் இலங்கை, அமெரிக்க பிறிமா கம்பனியிடமிருந்து மட்டுமே கோதுமை மாவைக் கொள்வனவு செய்து வந்தது.

கடந்த ஐந்து வருடங்களாக அரிசி உற்பத்தியை அதிகரித்து கோதுமை மாவின் பாவனையைக் குறைப்பதற்கும் அரிசி மாவைப் பயன்படுத்திப் பாணையும் மற்றும் உணவுப் பண்டங்களையும் தயாரிப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேயிலை, ஆடை ஏற்றுமதிகள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களினால் இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் அந்நிய செலாவணி, உணவுப் பொருள் இறக்குமதியினால் வீணாகிவிடுவதால், படிப்படியாக இறக்குமதிகளை நிறுத்துவதற்காகவே `பயிர் வளர்ப்போம்' இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று கடந்த செப்ரெம்பர் மாதம் வெளியிடப்பட்ட அரசாங்க அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உணவுப் பழக்கங்கள் மாற்றமடைவது இலங்கையில் மாத்திரமல்ல என்று தெரிவித்த கொழும்புப் பல்கலைக்கழக பொருளியலாளர் சிறிமால் அபேரத்ன, ஐரோப்பிய நாடுகளில் தற்போது அரிசி கூடுதலாக பாவனைக்கு எடுக்கப்படுகிறது என்று கூறினார். இது உலகமயப்படுத்தலின் ஒரு அம்சம் என்றும் அவர் தெரிவித்தார்.

உள்ளூர் உணவுற்பத்தியை அதிகரித்து இறக்குமதிகளைக் குறைக்கும் அரசாங்கக் கொள்கையை வரவேற்ற ஆர்வலர் பெர்னாண்டோ இந்தக் கொள்கையில் காணப்படும் குறுகிய நோக்கங்களைச் சுட்டிக் காட்டினார். உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதற்குப் பொருத்தமான கொள்கையை அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டுமென அவர் தெரிவித்தார். உணவை இறக்குமதி செய்யப் போதிய பணம் இல்லாததால் அவர்கள் உணவுற்பத்தியை அதிகரிக்க முயற்சி செய்கிறார்கள் என்று அவர் கூறினார்.

இந்தப் பிரசாரத்தின்படி, அடுத்த சில வருடங்களில் 40 இலட்சம் வீட்டுத் தோட்டங்களை ஏற்படுத்தி உணவு இருப்புகளை அதிகரிப்பதென அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.பயன்படுத்தப்படாதிருக்கும் காணிகளை ஒரு சிறு தொகை பணத்திற்குக் குத்தகை அடிப்படையில் விவசாயம் செய்வோருக்கு வழங்க வேண்டுமென அரசாங்கம் விரும்புகிறது.

இந்த நடவடிக்கை மூலம் ஊட்டச் சத்து குறைந்த கோதுமை மாவிலும் பார்க்க ஊட்டச் சத்து அதிகமான அரிசிப் பாவனை அதிகரிக்கும் என்றும் பொருளியலாளர் சாந்தரத்ன தெரிவித்தார்.

-ஐபிஎஸ்-

Email this page Your Opinion Print this page
இராணுவ இக்கட்டுநிலையை பதற்றத்துடன் மதிப்பிடுகிறார் ஜனாதிபதி
உள்நாட்டு அரிசி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் தானிய விலை அதிகரிப்பை குறைக்கலாம்
புண்ணிய சிந்தனைகளை வளர்க்கும் சித்திர பௌர்ணமி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com